மகிந்த ராசபக்சவை வெல்ல வைப்பதற்கான மற்றொரு முயற்சியை மகிந்த தரப்பு மேற்கொண்டுள்ளது. இதற்காக 5000கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராசபக்சவும், மைத்திரிபால சிறிசேனாவும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி தேர்தல் பிரசாரத்திலோ அல்லது எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலோ குறிப்பிடப்படவில்லை என்றும் எனவே தமிழ் மக்கள் தாம் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களித்து தமது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றும் வாதத்தை முன்வைத்து அந்த வர்த்தகர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களை அணுகியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
தமிழர்களின் வாக்குகள் மகிந்தவுக்கு கிடைக்காவிட்டாலும் எதிரணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மகிந்த ராசபக்ச தரப்பு உறுதியாக இருக்கிறது. இதற்காக தமிழர் தரப்பிலிருந்து அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை தேர்தலில் நிறுத்தினால் மகிந்தவின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என நம்பபடுகிறது.
சிவாஜிலிங்கம் இதற்கு சம்மதித்த போதிலும் சம்பந்தன் போன்றவர்களை நிறுத்துவதற்கே மகிந்த தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் விடுத்த அறிவிப்பே மகிந்த ராசபக்சவை வெற்றி பெற வைத்தது. இதற்காக மகிந்த தரப்பு விடுதலைப்புலிகளுக்கு கோடிக்கணக்கான பெருந்தொகை பணத்தை வழங்கியிருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
அது போல இம்முறையும் தமிழ் மக்களின் வாக்குகள் எதிரணிக்கு செல்லாமல் தடுத்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள 5000கோடி அல்ல அதற்கு மேலாகவும் கொடுக்க மகிந்த தரப்பு தயாராகவே உள்ளது.
ஆனால் இதற்கு சம்பந்தனோ அல்லது மாவை சேனாதிராசாவோ சம்மதிக்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தன் சம்மதிக்காவிட்டால் சிவாஜிலிங்கம் போன்ற போடுகாய்களையாவது நிறுத்த வேண்டும் என காரைநகர் வர்த்தகர் ஓடித்திரிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் காரைநகர் வர்த்தகரின் முயற்சி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.