தமிழ் மக்களைத் தோற்றுப்போன சமூகமாகக் கருத்துக்களை வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை எமது சமூகமே தோற்கடித்து வரலாறு படைத்தது.

167

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விசாரணையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களும் உள்ளடங்கியுள்ளதால் நாம் பலமாக இருந்தாலே விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த முடியும். இதற்கு மக்களின் வாக்கு பலம் அதிகம் எமக்குத் தேவை – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- தமிழரின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மௌனித்தது.

SAMSUNG CAMERA PICTURES

இதனையடுத்து தமிழ் மக்களைத் தோற்றுப்போன சமூகமாகக் கருத்துக்களை வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை எமது சமூகமே தோற்கடித்து வரலாறு படைத்தது. அதேபோன்று எமது கொள்கைகளை – எங்களது இலட்சியத்தை எமது மண்ணிலே தோற்கடிக்க நினைப்போருக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிப்பதுடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் எம்மால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்து தமிழ் இனம் என்றும் யாருக்கும் அடிபணியமாட்டாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும். இந்தத் தேர்தலில் எமக்கு தோல்வி ஏற்படுமாயின் எமது வேட்பாளர்களுக்கு கிடைக்கும் தோல்வி என்பதை விட எமது மக்களுக்கு கிடைக்கும் தோல்வியாகவே கருதவேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலில் எம்மால் முழுமையாக தேர்தல் பரப்புரைகளைக் கூட செய்யமுடியாத அளவுக்கு இராணுவ ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. தேர்தல் நாளன்று கூட வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன் சிவில் உடையில் காணப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

அதனால் வாக்களிப்போர் வீதம் குறைவடைந்ததால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்வரும் தேர்தலில் அவ்வாறான நிலைமை இல்லாததால் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குகளைச் செலுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் மக்களிடையே காணப்பட்ட அச்ச நிலை இன்னமும் நீங்கவில்லை என்பதை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களின் அளவுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொள்வோர் அந்த மக்களின் அச்சத்தைப் போக்கக்கூடிய வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி தேர்தலில் வாக்களிக்கச் செய்யவேண்டும். தமிழ் மக்கள் ஏனோதானோ எனச் செயற்படுவது எதிரணியினருக்கு வாய்ப்பாக அமைந்து விடும். பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இம்முறை தேர்தல் பரப்பரைகளில் ஈடுபடும் பேரினவாதக் கட்சிகளுக்கும், தமிழனத் துரோகக் கட்சிகளுக்கும் முகத்தில் கரி பூசுவது போல அவர்களை ஓரம் கட்டும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும்.

ராஜபக்‌ஷ மேற்கொண்ட ஊழல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு தெற்கு மக்களும் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களும் இடம்கொடுக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவது போல எமது கட்சிக்கு குறைந்தது 20 இடங்கள் கிடைப்பின் நிச்சயமாக பலம் பொருத்திய நிலையில் சர்வதேச சமூகத்திடம் எமது கோரிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோரலாம். எமக்குக் கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை இழந்து விடக்கூடாது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது மக்களின் விடிவுக்குப் பாடுபடவேண்டும் –

SHARE