தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

458

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.
இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார்.மே 18, 2009 அன்று சிறிலங்கா இராணுவத்தினர், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றனர். இவரது தலைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்றவாறு ஒரு துப்பாக்கிச் சூட்டுடன் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது. முன்னர் பிரபாகரனின் கூட்டணியிலிருந்து பின்னர் சிறிலங்கா அரசாங்க விசுவாசிகளாக மாறிய இரண்டு பேரைக் கொண்டு பிரபாகரனின் சடலம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவரது உடலம் எரிக்கப்பட்டது.

பிரபாகரனின் மரணத்துடன் 26 ஆண்டுகால யுத்தம் சிறிலங்காவில் நிறைவுக்கு வந்தது. போர் முடிவடைந்திருந்தாலும் கூட, சமாதானம் என்பது முற்றாக இங்கு நிலவவில்லை. சிறிலங்காவின் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அடக்குமுறைகள் நிலவுகின்றன. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். தமிழர் வாழும் பகுதிகளில் பலசரக்குக் கடைகள் தொடக்கம் விடுதிகள் வரை சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்துகின்றனர். இதனால் உள்ளுர் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் தம்மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டைவிட்டுப் புலம்பெயர்கின்றனர்.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், தமிழ் மக்கள் தமக்கான உண்மையான இருப்பிடத்தையோ அல்லது நீதியைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என நம்புகின்றனர். நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் தமிழ் மக்களின் அவாக்களை நிறைவேற்றுவதற்காக தனது அரசாங்கத்தின் ஊடாக செயற்படுபவருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரும் நானும் பல ஆண்டுகளாக மன்கற்றானிலுள்ள எமது விருப்பத்திற்குரிய செற்றினன்ட் விடுதியில் உணவு உண்பது வழக்கமாகும். இவ்வாறு நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட ஒருநாள் பிரபாகரன் தொடர்பாக அவர் சில நினைவுகளைப் பகிர்ந்தார். அதாவது தான் நேரடியாகப் பிரபாகரனின் உடலைப் பார்க்கும் வரை, இவர் இறந்துவிட்டார் எனத் தான் நம்பமாட்டேன் எனக் கூறினார்.

சிறிலங்காவின் போர் தொடர்பாக சமந் சுப்பிரமணியன் [Samanth Subramanian a ‘New Yorker’ contributor] ‘இந்தப் பிரிக்கப்பட்ட தீவு’ என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார். இந்த நூலில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மக்கள் நம்புவதற்கான காரணங்கள் என்ன என்பதை எடுத்துரைத்திருந்தார். “பிரபாகரன் வாழ்ந்த வாழ்க்கை, புலிகள் மிகவும் இக்கட்டான போரின் போதும் அதிலிருந்து தப்பித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் இவர் உயிருடன் பிடிபடுவது மிகவும் கடினமானதாகும். பிறிதொரு காரணத்தை நோக்கில், பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்ற போதிலும் இவர் ஒரு நம்பகமற்ற சாட்சியத்தின் முன்னால் அதாவது இராணுவத்தினர் போன்ற நம்பகமற்ற தரப்பினர் முன்னிலையிலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பதால் இதனை தமிழ் மக்கள் நம்பமறுக்கின்றனர்” என சுப்ரமணியம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதுடன், குண்டுத்தாக்குதல் அங்கிகளையும் தயாரித்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ்ப் புலிகள் உலகில் பேசப்பட்ட ஒரு கிளர்ச்சி அமைப்பாகக் காணப்பட்டது. புலிகளின் கொடியானது இரத்தச் சிவப்பு நிறத்தைப் பின்னணியாகவும், நடுவில் பாயும் புலியுடன் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இவற்றைச் சூழ துப்பாக்கி ரவைகளையும் சித்தரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. 1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரபாகரன் ஒரு இரக்கமற்ற, கடும்போக்கான தலைவராகக் காணப்பட்டாலும் கூட, இவரது தமிழ்ச் சமூகத்தினர் இவரது வன்முறையைத் தமது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்தனர். சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத் தமது பாரம்பரிய பிரதேசங்களாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டதால் யுத்தம் ஆரம்பமானது. போரின் ஆரம்ப காலங்களில், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் வைத்துப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் 1987ல், புலிகள் மேலும் வளர்ச்சியடைந்து மேலும் வன்முறையாளர்களாக மாறிய போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறிலங்கா அரசாங்கத்தின் ஒப்புதலுடன் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்காவுக்கு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பினார். மரபுப் போர் உத்திகளை நன்கறிந்திருந்த புலிகள் இந்திய அமைதி காக்கும் படையைத் தோற்கடித்தது.

1991ல், சென்னையிலுள்ள சிறிபெருப்புதூர் நகருக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வருகை தந்தபோது, குண்டுகள் மறைக்கப்பட்ட மாலையை ராஜீவ் காந்தியின் கழுத்தில் அணிந்து அவரைக் கொல்வதற்காக புலிகளால் மூன்று தற்கொலைக் குண்டுதாரிகள் அனுப்பப்பட்டனர். இக்குண்டுவெடிப்பில் இந்தியப் பிரதமருடன் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நூறு வரையானவர்கள் காயமடைந்தனர்.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகளின் பின்னர், தமிழ் இளையோரில் அதிகமானோருக்கு புலிகளின் பயங்கரவாதம் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. இதனால் பிரபாகரன் தமிழ் மக்களால் தலைவராக மதிக்கப்பட்டார். இவரது தலைமைத்துவ ஆற்றலால் உள்ளுர் அரசியல்வாதிகள் கூட கவரப்பட்டனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்பத்தூரில் உள்ள விடுதி ஒன்றில், நான் மூன்று இளையோர்களைச் சந்தித்தேன். அவர்கள் தமது சேட் பொக்கற்றுள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஒளிப்படங்களைக் கொண்டிருந்தனர். இந்தியாவில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி போல் பிரபாகரனும் ஒரு பலமான மனிதர் என அந்த இளைஞர்கள் குறிப்பிட்டனர்.

இந்தியாவில் எனக்குச் சாரதியாகப் பணிபுரிந்தவர் தனது தகப்பனார் தனது தங்கையைக் கைகளால் கொன்றதை நேரில் பார்த்ததால் இவர் பிரபாகரனின் வன்முறையை அடையாளங் கண்டிருந்தார். பிரபாகரன் சாதி மற்றும் பால் பேதமற்ற ரீதியில் யுத்தத்தில் போரிடுவதற்கான அமைப்பை உருவாக்கியிருந்தார். தற்கொலைப் பெண் புலிகள் பிரிவையும் உருவாக்கியிருந்தார். புலிகள் தமது கழுத்துக்களில் சயனைட் வில்லைகளை அணிந்திருந்தனர். தாம் எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக இவர்கள் சயனைட் குப்பிகளை வைத்திருந்தனர்.

 

ராஜீவ் காந்தி மீதான புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறிபெரும்புதூரில் படுகாயமடைந்த டேவிட் என்பவரை நான் சந்தித்தேன். இவரது கால்களில் காயமேற்பட்டதால் நடக்க முடியாதிருந்தார். இவரால் தற்போது தடியின் உதவியுடன் நடக்க முடிந்தது. இவர் தற்போதும் பிரபாகரனை ஆதரிப்பதாகவும் தான் இவரது இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கனடாவின் ரொரன்ரோவில் 250,000 வரையான புலம்பெயர் சிறிலங்காத் தமிழர்கள் வாழ்கின்றனர். பிரபாகரன் தலைமறைவாக இருப்பதாகவும், தமிழீழத்திற்கான போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு இவர் வெளிப்படுவார் எனவும் ரொரன்ரோ வாழ் தமிழர் நம்புகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் ரொரன்ரோவின் புறநகர்ப் பகுதியான ஸ்காபறோவில் உள்ள தமிழர்களின் கடைகள், விடுதிகள், வர்த்தக நிலையங்களில் பிரபாகரனின் ஒளிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ரொரன்ரோவின் கடைத் தொகுதி ஒன்றில், நான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம், சாம் சங்கரிசிவம் மற்றும் தகவற்துறைச் செயலர் றோய் விக்னராஜா ஆகியோரைச் சந்தித்தேன். இவர்கள் மூவரும் உருத்திரகுமரனைப் போலவே, புலிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ரொரன்ரோவில் புலிகளுக்கு நிதி வழங்குவதற்காக தமிழர்கள் வர்த்தகங்களில் ஈடுபடுவதாக 2006ல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைக் கூட இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சேர்ந்த மூவரும் தமிழ் மக்கள் சிறிலங்காவில் எவ்வாறான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாகக் கூறினார்கள். “சிறிலங்காவானது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒரு திறந்த சிறைச்சாலை ஆகும். இங்கு எல்லோரும் கண்காணிக்கப்படுகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவரும் முறையிட முடியாது. இவர்களுக்கு எதிராக எதனையும் கூறமுடியாது. இதனைச் செய்கின்ற எவரும் அடுத்த நாள் காணாமற் போவார்கள். இதுதான் தற்போதைய சிறிலங்காவின் நிலைப்பாடு” என சங்கரிசிவம் தெரிவித்தார்.

சிறிலங்காவில் சிங்களக் காடையர்களால் 3000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு யூலைக் கலவரத்தின் பின்னர், கனடாவில் தஞ்சம் புகுந்த விக்னராஜா என்பவரை நான் சந்தித்தேன். இவர் ஆயுட் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நிறுவனத்தில் குடிவரவுக் கோட்பாடு தொடர்பான ஆலோசனைகள், தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதுடன், பலமான சமூகப் பாதுகாப்பு வலைத்தளமாக இது இயங்குகிறது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறிலங்காத் தமிழர்களுக்கு கனடா ஒரு சொர்க்கமாக மாறியுள்ளது.

“கொழும்பில் நான் வாழ்ந்த குடியிருப்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கறுப்பு யூலைக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்களுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு பௌத்த பிக்கு ஆவார். இவர் வாக்காளர் அட்டைகளைத் திருடி அதிலிருந்த தமிழர்களின் வீடுகளைத் தாக்குமாறு கட்டளையிட்டார்” என்கிறார் விக்னராஜா.

போர் முடிவடைந்ததன் பின்னர், 1983லிருந்து தமிழ் மக்களுக்கு எதிராக தன்னால் இழைக்கப்பட்ட மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கமறுக்கிறது. இதற்குப் பதிலாக தான் பயங்கரவாதம் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகக் கூறி போர் வெற்றியைக் கொண்டாடுகிறது. “பயங்கரவாத அமைப்பை முற்றாக ஒழித்த ஒரேயொரு நாடு எமது நாடாகும். தாய்நாட்டைப் பெறுவதென்பது வெறும் கனவாகும். ஏனெனில் புலிகளின் தனிநாட்டுக்கான யுத்தம் மீண்டும் ஆரம்பிக்காது” என சிறிலங்காவின் ஐ.நா தூதர் பாலித கோகன தனது அலுவலகத்தில் வைத்து என்னிடம் தெரிவித்தார்.

 

நான் கோகிதவுடன் நான் எனது நேரத்தைச் செலவிட்ட போது புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனுக்காக ஏன் ஏங்குகிறார்கள் என்பதை மேலும் அதிகம் புரிந்துகொண்டேன். போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், சிறிலங்காவை ஆளும் ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தைத் தமது கைகளில் வைத்துள்ளனர். இங்கு நீதிச் சேவை செயற்படவில்லை. அரசியல் எதிரிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

மொன்றியலைச் சேர்ந்த தமிழரான அன்ட்றூ அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா மே 2012ல் சிறிலங்கா இராணுவத்தின் பிடியிலிருந்த தனது நிலத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த போது அங்கு கைதுசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நான் கோகனவிடம் கேட்டேன். “உண்மையில் எனக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எதுவும் தெரியாது. இதனால் இதற்கு என்னால் பதிலளிக்க முடியாது” எனக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை நான் கோகனவிடம் காட்டிய போது, “இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இராணுவத்தினர் மக்களைக் கொலை செய்கின்ற சம்பவங்களா?” என அவர் தனது குரலை உயர்த்தி வினாவினார். தமிழ் மக்கள் தற்போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதாக பாலித கோகன என்னிடம் தெரிவித்தார்.

“நாங்கள் கடந்த காலக் கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு நல்லதொரு வாழ்வை வாழவேண்டும். ஏனெனில் தற்போது இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது வாழ்வை ஆரம்பியுங்கள். நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதியாக வாழும் போது எமது அடுத்த தலைமுறையினர் எவ்வித துன்பங்களையும் அனுபவிக்கமாட்டார்கள்” என கோகன விளக்கினார். சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து சிறுபான்மையினர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டிலிருந்து தீவிரவாத பௌத்த குழுக்கள் சிங்கள கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். வடக்கு கிழக்கின் பெரும் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

மே 19 அன்று சிறிலங்காவில் போர் வெற்றியின் ஐந்தாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. மார்ச் 27ல், உருத்திரகுமார் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆர்வலர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவால் இழைக்கப்பட்ட மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதில் வெற்றியடைந்தனர். இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது நாடு கடந்த அரசாங்கம் போன்ற புலி ஆதரவு அமைப்புக்களையும் உருத்திரகுமார் போன்ற புலி ஆதரவாளர்களையும் பயங்கரவாதிகள் எனக்கூறித் தடைசெய்தது. “சுயாதீன நாட்டில் நீங்கள் நம்பிக்கை வைக்காவிட்டால் இங்கு மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியாது” என்கிறார் உருத்திரகுமார்.

சிறிலங்காவில் போர் வெற்றி கொண்டாடப்பட்ட அதேவேளையில், போர் வெற்றி கொண்டாடப்படுவதற்கு முதல் வந்த ஞாயிறன்று உருத்திரகுமாரும் அவரது நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும் மிகவும் அமைதியான முறையில் ஒன்றுகூடி போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட 40,000 பேருக்கு அஞ்சலி செலுத்தினர். உருத்திரகுமாராலும் ஏனையவர்களாலும் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை என நம்பப்படுகின்ற போதிலும், இவர்கள் பிரபாகரனுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE