தலாய் லாமாவுக்கு இலங்கை வீசா வழங்குமா?

371
இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பம்

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பது பௌத்தர்களின் விருப்பமாக உள்ளது என்று உபதிஸ்ஸ தேரர் கூறுகிறார்.

கடந்த 1950ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை எனவும் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.

அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் கூறுகிறார்.

விண்ணப்பித்தால் பரிசீலனை

ஆனால் இலங்கைக்கான பயணம் குறித்து தலாய் லாமாவோ அல்லது அவரது சார்பாக வேறு யாருமோ இதுவரை அரசைத் தொடர்பு கொள்ளவோ வீசா கோரியோ விண்ணப்பம் ஏதுமோ செய்யவில்லை, அவ்வாறு விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற பின்னர் அது குறித்து இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அஜித் பெரேரா பிபிசியிடம் தெரிவித்தார்.

இப்படியான சூழலில் முதல் முறையாக இலங்கை செல்ல ஆர்வம் வெளியிட்டுள்ள தலாய் லாமாவின் பயணம் யதார்த்த ரீதியில் இடம்பெறுமா என்பது இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளைப் பொறுத்தே அமையும் என்று கருதப்படுகிறது.

தலாய்லாமாவுக்கு அனுமதி மறுப்பு : இலங்கை முடிவுக்கு சீனா வரவேற்பு

திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் வருகைக்கு, இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு, சீனா வரவேற்பு தெரிவித்து உள்ளது.

தலாய்லாமா மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால், அவரின் வருகையை அனுமதித்து சீனாவை ஆத்திரமூட்ட விரும்பவில்லை என, இலங்கை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறும்போது:

தலாய்லாமா எந்த நாட்டிற்கும் செல்வதற்கு, நாங்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அவர் குறித்த நிலைப்பாட்டில், தெளிவாக உள்ளோம். இதை, பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தியுள்ளோம்.

இலங்கை, எங்களது நெருங்கிய நட்பு நாடு. இந்த விடயத்தில், எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

இதன் மூலம் எங்களது உறவு மேலும் பலப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

SHARE