தான் சார்ந்த சமூகம் விடுதலைபெறவேண்டும் என்பதில் அக்கறையுடன் தனது ஊடகப் பணியை செவ்வனவே மேற்கொண்டவர் ஊடகவியலாளர் டி.சிவராம் – பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்

316

ஊடகத்துறையில் அரும்பெரும் பணியாற்றிய தாரக்கி என்று அழைக்கப்படும் டி.சிவராம் அவர்கள் பலவருடங்களாக ஊடகத்துறையில் தடம்பதித்து வந்தவர். அவருடைய நினைவு தினம் 28.04.2015 அன்று ஆகும். ஆனால் 29.04.2015 அன்று அவருடைய அவருடைய நினைவு தினம் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இவரைப்பற்றிக் கூறுவதாக இருந்தால் ஏப்ரல் மாதம் 28,2005 அன்று கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்டு வந்த பாராளுமன்ற வளாகத்திற்குற்பட்ட பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். உண்மையிலேயே மாமனிதர் சிவராம் அவர்கள் ஊடகவியலாளர் மட்டுமன்றி, ஒரு ஆய்வாளராகவும் காணப்பட்டார். ஆரம்பகால போராட்ட வரலாற்றில் இவர் ஒரு போராளியாக தன்னை புளொட் இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர். 1986ம் ஆண்டு காலப்பகுதியில் இயக்கங்கள் முடக்கப்பட்டு செயலற்ற நிலையில் இருந்த காலப்பகுதியிலும் எஸ்.ஆர் என்ற புனைப்பெயருடன் அரசியல் தலைவராகவும், அவரது போராட்ட நகர்வுகளை நகர்த்தி வந்தார்.

அதற்குப்பின்னர் புளொட் இயக்கத்தில் இருந்து விலகி முழுமையான ஊடகவியலாளராகவும், ஆய்வாளராகவும் செயற்பட ஆரம்பித்தார். அந்தகாலகட்டத்தில் மட்டக்களப்பில் இருக்கக்கூடிய கிழக்கு இலங்கை பத்திரிகையாளர் சங்க  ஆலோசகராக1998 இருந்து செயற்பட்டு வந்தார்.

அக்காலகட்டத்தில் நான் அவருடன் நெருக்கமாக பழகியிருந்தேன். நிந்தவூர் சலீம், இரா.துரைரட்ணம், செயலாளர் தவராசா, உபதலைவராக மறைந்த ஊடகவியலாளர் பா.நடேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, மட்டக்களப்பு டீடீஊ செய்தியாளர் உதயகுமார், மற்றும் வேதநாயகம், துறைநீலாவணை பேரின்பராசா என பல்வேறுபட்டவர்கள் இந்த கிழக்கு இலங்கை பத்திரிகை சங்கத்தில் அங்கத்தவர்களாக செயற்பட்டிருந்தனர்.

2001ம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெறுவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இவரே. இதேவேளை இக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் தான் நான் இன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். மாவீரர் சிவராமைப் பார்க்கின்ற பொழுது அவர் ஒரு ஆய்வாளர், கட்டுரையாளர், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டுரை எழுதுவதில் வள்ளுனராக இருந்தார். சமூகம் விடுதலைபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். டீ.சிவராம் ஊடகவியலாளர் என்ற வகையில் வெறுமனே செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதுபவராக அவர் இருக்கவில்லை. அவரது கொலை நடந்து பத்துவருடங்கள் நிறைவடைந்துவிட்டது என நான் நினைக்கின்றேன். இதுவரையிலும் சரியானவர் யார்? என்று கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படவில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாகுவதற்கு முக்கியமான காரண கர்த்தாவாக இருந்தவர் என்ற வகையில் அவரை இலங்கை அரசு திட்டமிட்டே கொலை செய்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் பத்துவருடங்களுக்குப் பின் அவரது நிகழ்வை நினைவு கூறுவதற்கு ஒரு காலம் வந்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். இதுவரை காலமும் ஏன் அவர் நினைவு கூறப்படவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே அது வேதனைக்குரிய விடயம் தான். இராணுவ கெடுபிடிகளின் காரணமாக அவரது நினைவு நாட்களை அனுஷ்டிக்க இயலாமல் போனது. இருந்தாலும் ஆட்சிமாற்றத்திற்குப்பின் ஓரளவு இவ்வாறான நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பத்தாண்டுகளுக்கு பின்பு வடபிராந்திய ஊடகவியலாளர்கள் நால்வர் குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்கள். மீண்டும் ஊடக அடக்குமுறை வடகிழக்கில் தொடர்கின்றது என்பதையே இவ்விடயம் எடுத்துக்காட்டுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணத்திலும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி என்று கூறினாலும், தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும் இவ்விடத்தில் கூறவிரும்புகின்றேன்.

darmaratnam_sivaram

SHARE