திட்டமிட்ட குடியேற்ற முயற்சியையும் கருங்கல் அகழ்வையும் நிறுத்துங்கள்! ஒட்டுசுட்டான் மக்கள் ரவிகரனிடம் கோரிக்கை

178

 

முறிகண்டி கொக்காவிலில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்ற முயற்சியையும் தட்டயமலை, வாவெட்டி மலைகளில் நடைபெறும் கருங்கல் அகழ்வையும் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையொன்றானது வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
unnamed (17) unnamed (18)
கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறான கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று ரவிகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-06-16 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.
மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பன தமது பிரதேசத்தில் காணப்படும் குறைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
முறிகண்டிப்பகுதியில் எக்காலத்திலும் வசித்திராத 200 குடும்பங்களை குடியமர்த்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை தெரிவித்திருந்த மக்கள் அவற்றை தடுத்து நிறுத்துவது தொடர்பான வடமாகாணசபை முதலமைச்சருக்கான கோரிக்கை மனுவொன்றை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கையளித்தனர்.
மேலும் ஓட்டுசுட்டான் வாவெட்டி தட்டயமலைகளில் தொடரும் கருங்கல் அகழ்வால் தமது வளங்கள் அபகரிக்கப்படுவதை குறிப்பிட்ட மக்கள் இவ்வாறு வெடிவைத்து இரண்டு மலைகளையும் தகர்ப்பதால் அப்பகுதியில் நில அதிர்வுகள் அந்நேரங்களில் ஏற்படுவதாகலும் அம்மலைகளை அண்மித்த இடங்களில் உள்ள வீடுகள் வெடிப்புக்குள்ளாகுவதாகவும் குறிப்பிட்டு அவை தொடர்பான கோரிக்கை மனுவொன்றையும் கையளித்தனர்.
இது தவிர கிராமத்தின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக பலரும் தமது கருத்துக்களையும் குறைகளையும் முன்வைத்தனர்.
அதன் பின்னர் அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத்தெரிவித்த ரவிகரன்,
திருமுறிகண்டிப்பகுதியில் திட்டமிடப்பட்டதாக குறித்த இடத்தில் எதுவித முன்தொடர்பையும் கொண்டிராத 200 குடும்பங்களை குடியமர்த்தும் முயற்சி தொடர்பான கோரிக்கை மனுவை மதிப்புக்குரிய வடமாகாணசபை முதலமைச்சர் அவர்களிடம் கையளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் வாள்வெட்டு மலை மற்றும் தட்டையர் மலைகளில் நடைபெறும் கருங்கல் அகழ்வு தொடர்பாக விவசாய நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
போரின் பின்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தேவைகள் அதிகாகவே உள்ளன. பொருளாதாரக்கட்டமைப்பை பலப்படுத்தி சமூகக்கட்டமைப்புகளை பலப்படுத்தி படிப்படியாக தமிழ் மக்களின் தேவைகளையும் குறைகளையும் களைவதற்கான அபிவிருத்திப்பணிகளை மெல்ல மெல்ல முன்னெடுப்பதே எம் நோக்கமாகிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் குறைகள் இவ்வாறான தொடர் மக்கள் குறைகேள் சந்திப்புகள் மூலம் களையப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் திரு. குருபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதேச செயலாளர் திரு.குருபரன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பஞ்சலிங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் உரையாற்றினர்.

 

SHARE