ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரத்தை கருத்தில்கொண்டு பாப்பரசரின் இலங்கை வருகை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பாப்பரசர் பிரான்ஸிஸ் நிச்சயமாக இலங்கை வருவார் என இலங்கை கத்தோலிக்க பேரவை உத்தியோகபூர்மாக அறிவித்தது. மேலும், 14 ஆம் திகதியன்று கொழும்பு, காலி முகத்திடலில் பாப்பரசரினால் நடத்தப்படும் விசேட திருப்பலி பூஜையின்போது முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு ‘புனிதர்’ பட்டம் சூட்டப்படும் என்றும் பேரவை தெரிவித்தது.
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள ‘செடக்’ நிறுவன கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது கத்தோலிக்கப் பேரவையின் ஊடகப் பேச்சாளரான அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: “இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக 13 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கை வருகிறார். அவர் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலிமுகத்திடலில் விசேட திருப்பலி ஆராதனையொன்றை நடத்துவார். இதற்காக நாடளாவிய ரீதியில் வாழும் சகல கிறிஸ்தவ மக்களும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் கூட காலிமுகத்திடலுக்கு வருகை தந்துவிட முடியும்.
வருகை தரும் மக்களுக்காக விசேட சுகாதார வசதிகளும், போக்குவரத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்படுகின்றன. பாப்பரசரின் வருகை இலங்கை வரலாற்றில் முக்கிய நிகழ்வு என்பதால் திருப்பலியில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரும் ஒழுக்கமான முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், திருப்பலியின்போது அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த விசேட திருப்பலியின்போது முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு பாப்பரசரால் ‘புனிதர்’ பட்டம் சூட்டப்படவுள்ளது. ஆகவே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தை இலங்கை வாழ் சகல கத்தோலிக்க – கிறிஸ்தவ மக்களும் பயன்படுத்தி திருப்பலியில் கலந்துகொண்டு ஆசி பெற வேண்டும். இதேசமயம் இத்திருப்பலி முடிவடைந்ததும் மாலை 4 மணியளவில் பாப்பரசர் பிரான்ஸிஸ் மன்னார் மடு மாதா ஆலயத்துக்கு செல்வார். அங்கு விசேட செபமாலை ஆராதனையிலும் ஈடுபடுவார்”