தினப்புயல் அலுவலகத்திற்கு வருகை தந்த தழிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா உடனான நேர்காணலின் போது

377

கேள்வி:- வன்னிமாவட்டத்திலே வேட்பாளராக போட்டியிடும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களே வணக்கம். நீங்கள் ஒரு ஓய்வு பெற்ற நிலையில் ஒரு திட்டமிடல் பணிப்பாளராகப்பணிபுரிந்திருக்கின்றீர்கள் இந்த நிலையிலே நீக்கள் இந்த அரசியலுக்குள் வருவதற்கான காரணம் என்ன? உங்களைச் சற்று அறிமுகம் செய்யுங்கள். SAMSUNG CAMERA PICTURES பதில்:- எனது பெயர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா நான் பாராளுமன்றத் தேர்தலில் 2015ல் வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். எனது சொந்த இடம் முல்லைத்தீவு மாவட்டம் நான் அங்கேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்று இறுதி யுத்தத்தின் போது மீண்டு தற்போதும் அங்கேயே வசித்து வருகின்றேன். இலங்கைத் திட்டமிடல் சேவையில் தரம் ஒன்றில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பிரதேசசெயலகம் துணுக்காயில் கடமையாற்றினேன். எனது ஓய்வுக் காலம் இன்னும் பத்து வருடங்கள் இருக்கின்ற பொழுதிலும் நான் அந்த வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இப்பொழுது வேட்பாளராக போட்டியிடுகின்றேன். இவ்வாறு வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான முக்கிய காரணம் இந்த மீள் குடியேற்றத்தின் பின்பு எமது சமூகம் போகின்ற போக்கு என்னை இந்த போட்டியினுள் கொண்டு வந்து விடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் இதனைவிட மேலாக நான் சார்ந்து நிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியினதும், தமிழத் தேசியக் கூட்டமைப்பினதும் தூரநோக்கான வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயட்சிக்காக இந்தக் கட்சியோடு இணைந்து பாடுபடுவதில் நான் என்னை முழுமூச்சாக என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்பதற்கும் மேலாக இந்த வன்னி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மீண்டவள் என்ற வகையில் இந்த மீள் குடியேற்றத்தின் பின்பு சமூகம் போகின்ற போக்குத் தான் என்னை இன்று இங்கு கொண்டு வந்து விட்டது. அதாவது எங்களுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் கட்டுடைக்கப்படுகின்றன. நாங்கள் முப்பது வருடங்களாக ஆயுதப்போராட்டம் மூலம் போராடி வெல்ல முடியாது தோற்றுப் போனதை தற்போது சார்த்வீக ரீதியாக போராடி வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாநில சுயட்சி என்னும் கனி கனிந்து வருகின்ற இந்த நிலையிலே இந்த தேர்தல் நடாத்தப்படுவது என்பது ஒரு முக்கியமான ஒரு மைல் கல்லாக இருக்கின்றது. இந்த கனிந்து வருகின்ற இந்தச் சொத்தை நாம் யாரிடம் கையளிக்கப் போகின்றோம் என்பது தான் எனக்கு ஒரு பெரியொரு இக்கட்டான நிலையாக இருந்தது. அதாவது எவ்வளவு தூரம் அரசியலில் பாடுபடுகின்றோம் என்பதற்கு மேல் சமூகக் கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்படவேண்டும். இந்தக் கனியை அல்லது அந்தச் சொத்தை எப்படியான ஒரு சமூகத்துக்கு கையளிக்கப் போகின்றோம். இந்த மக்களையும், பிள்ளைகளையும் எங்களுடைய மீள் குடியேற்றத்திற்குப் பின்பு திட்டமிட்டு அழிக்கின்றார்கள். அதாவது அவர்கள் முதலாவதாக இழக்கிட்டிருக்கின்றது எங்களுடைய பிள்ளைகளை பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கு போதைவஸ்துக்களைக் கொடுப்பது ஒரு திட்டமிட்ட செயலாகும். அந்த வகையிலே இந்தப் பிள்ளைகள் ஒரு ஐந்து வருடத்திற்கு பிற்பாடு ஒரு கொலைகாரனாகவோ, வால்வெட்டுக் குழுக்களாகவேதான் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் நாங்கள் இந்தக் கனியை கையளிப்போமாக இருந்தால் அது நாங்கள் திரும்பவும் பூச்சியத்தில் தான் எமது தமிழ் மக்களை கொண்டு வந்து நிற்கவிடவேண்டிய ஒரு நிலையாக அமையும். மேலும் இந்துக் கோயில்கள் ஐந்து கோயில்களில் ஒரே இரவில் களவாடுகின்றன. இதுவும் அவர்கள் செய்கின்ற பெரியொரு இக்கட்டான வேலை. மீள் குடியேற்றத்திற்குப் பின்பு வடக்கின் வசந்தம் என்ற வகையில் கோடிக்கானக்கான உற்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்ற அதே வேளையில் எங்களுடைய தன்மானம், கௌரவம், பாரம்பரியங்கள், விழுமியங்கள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றது. இந்த ஒரு இக்கட்டான நிலையில் நான் ஒரு அரச உத்தியோகத்தராக இருக்கின்ற பொழுது இவை என்னுடைய மனச் சுமையாக இருந்தது. இவற்றை வெளியிலே கூறமுடியாது இருந்தது. ஆனால் என்னுடைய அரச சேவைக்கு ஓய்வு கொடுத்ததன் பின்பு இவற்றை நாம் எடுத்து வெளியே கூறுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக, நல்ல வாய்ப்பாக நான் கருதுகின்றேன். இதற்கு மேலாக இந்த முப்பது வருடகால யுத்தத்தின் பின்பு நேரடியாக பாதிக்கப்பட்ட யுத்த விதவைகள், யுத்தத்தினாலே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், புனர்வாழ்வு பெற்று வந்த முன்னைய போராளிகள் சம்பந்தமாக எதுவிதமான விசேட விதமான நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஒரு யுத்த விதவைக்கு ஒரு பால் மாட்டைக் கொடுப்பதாலோ, அல்லது இருபத்தையாயிரம் பெறுமதியான கோழிக்குஞ்சைக் கொடுப்பதலையோ தாயினதும் பிள்ளையினதும் பிரச்சினை தீர்ந்துவிடாது. அவர்கள் நிலையான வருமானத்தை பெறக்கூடிய வகையிலே அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அபிவிருத்தி என்பது கட்டிடங்களைக் கட்டுவதோ, மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோ, கொம்யூட்டரைப் பூட்டுவதோ அல்ல. ஒவ்வொரு தானிமனிதனும் நிலைபெறாத வருமானத்தை ஏற்படுத்தக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கேள்வி:- நீங்கள் இருவரையில் திட்டமிடல் பணிப்பாளராக இருந்து மக்களுக்குச் செய்த சேவைகளைச் சொல்லுங்கள். பதில்:- என்னுடைய அரசசேவை என்றதுக்கு அப்பாலே தனிப்பட்ட முறையிலே விசேடமாக நான் கூறிக்கொள்ள வேண்டியது மாற்றுவலுவுள்ளோருக்கு நான் செய்த சேவையை நான் இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். எப்படியென்றால் வலி உள்ளவர்களுக்குத் தான் வலியைப் பற்றி விளங்கும். நான் இந்த இறுதி யுத்தத்தின் போது செல்வீச்சுக் காரணமாக எனது இடது காலை இழந்தேன். அந்த வலி தான் என்னை இந்த அரசசேவையில் இருந்தாலும் ‘ஒளிரும் வாழ்வு’ என்னும் அமைப்பை அமைப்பதற்கு ஒரு ஊன்று கோலாக அமைந்தது. இந்த அமைப்பின் ஊடாக ஏறக்குறைய இந்த மூன்று வருட காலத்துக்குள் ஒரு கோடி ரூபா வரையில் இந்த அமைப்பின் ஊடாக மாற்றுவலுவுள்ளோருக்கு உதவி செய்துள்ளோம். அதாவது அவர்களுக்குரிய கல்வி, வாழ்வாதாரம், மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எம்மால் இயன்ற உதவியினை இந்த அமைப்பினூடாகச் செய்திருக்கின்றோம். அடுத்ததாக நான் செய்த சமூக சேவை என்ற வகையில் அறநெறி பாடசாலைகளை நடாத்துவது என்பது இந்த அரச சேவைக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக சேவை நான் வாழுகின்ற பிரதேசத்தில் பாடசாலைகளில் ஏறக்குறை ஒன்றரை வருடங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பாடசாலைப் பிள்ளைகளை ஒன்றினைத்து அவர்களுக்கு அறத்தைச் சொல்லி அதாவது உண்மை, நேர்மை, சத்தியம், ஒழுக்கம், கீழ்ப்படிவு இப்படிப்பட்ட பழக்கவலக்கங்களை, விழுமியங்களைச் சொல்லிக் கொடுப்பதும் என்னுடைய ஒரு சேவை. இதற்கும் மேலாக அந்த ஊரில் உள்ள பெண்ளை ஒருங்கினைத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரமகுமாரிகளின் அனுசரனையுடன் ஒன்றரை மணித்தியாலம் தியான வகுப்புகளை நடத்துவது அதாவது தியானத்தைச் செய்வது இது துணுக்காய் பிரதேசத்தில் பரவலாக நான்கு ஐந்து இடங்களில் நடாத்தப்படுகின்றது. இது நான் செய்த தனிப்பட்ட சமூக சேவை என்பதை நான் இங்கு குறிப்பிடுக் கூறமுடியும். கேள்வி:- இனி நீங்கள் இத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டு அதாவது தமிழரசுக் கட்சி சார்பாகத் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள். பதில்:- உண்மையிலேயே நான் மக்களை ஏமாற்றி, பொய் சொல்லி வாக்குக் கேட்கவில்லை, அதாவது றோட்டைப் போட்டுத் தருவன், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டித்தருவேன், மின்சாரம் இல்லாதவர்களுக்கு மின்சாரம் எடுத்துத் தருவேன் என் பொய் சொல்லி வாக்குக்கேட்கவில்லை. ஒரு மனித நேய பணிக்கான பயனம் என்பது தான் என்னுடைய இந்த அரசியலில் நான் வெற்றி பெற்ற பின்பு இலக்கிட்டு இருக்கின்ற என்னுடைய முதலாவது இலக்கு. இந்த திசைமாறிப் போகின்ற பிள்ளைகளை ஒருநிலைப்படுத்துதல் அவர்களை ஒரு கட்டுக்கோப்பான சமூகமாக உருவாக்குதல் இது முதலாவது என்னுடைய இலக்கு. இரண்டாவது இந்த யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகள் இவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பாடுபடுதல். அதாவது ஒரு மாற்றுவலுவுடையோரது அடிப்படைத் தேவை மலசல கூட வசதி, வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, அவர்களுடைய உரிமைகள் அங்கே நிர்ணயிக்கப்படவில்லை இவற்றுக்காகப் பாடுபடுதல். இந்தப் பெற்றோரை இழந்த பிள்ளைகள் பெரும்பாலானோர் பதினான்கு வயதிற்கு உற்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுடைய கல்வி விசேடமாகக் கவணிக்கப்படவேண்டும். மீள்குடியேற்றம் நடந்து ஆறுவருட காலத்தில் அவர்களுக்குப் பாடசாலைகளில் கொண்டு வந்து ஒரு புத்தகப் பையையோ, பென்சில், கொப்பி, சப்பாத்துக்களைக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. அவர்களுடைய கல்வி விசேடமாகக் கவணிக்கப்படவேண்டும், அவர்களுடைய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக விசேடமாக நான் ஒரு பெண் பிரதிநிதி என்ற வகையில் இந்தப் பெண்களுடைய உரிமைகள் அங்கு நிலை நாட்டப்படவேண்டும், பாராளுமன்றத்தில் ஒலிக்கப்படவேண்டும், பெண்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள், பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், அவர்களுடைய உரிமைகளை வலியுறுத்துவதற்கு நான் ஒரு ஊன்று கோலாக அமைவேன். நான் ஒரு உதாரணத்தைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். இந்த யுத்தகாலத்தில் பெண்கள் மிகவும் கௌரவமாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் நடாத்தப்படவில்லை. ஆனால் இந்த மீள்குடியேற்றக் காலத்தின் பின்பு ஒரு இரண்டு வயதுப் பிள்ளையை தொட்டிலில் படுக்கப்போட்டுவிட்டு அடுத்த வீட்டுக்கு அம்மா தண்ணீர் எடுக்கப் போகமுடியாத ஒரு அச்சுறுத்தல் நிலையிலேயே பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஒரு பரிகாரத்தைத் தேடிக் கொடுப்பதும் என்னுடைய இந்த இலக்கில் முக்கியமானதொன்றாக இருக்கின்றது.   கேள்வி:- இறுதியாக நீங்கள் இந்த இலங்கையிலே செறிந்து வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் ஒரு முக்கியமானதொரு தேர்தலைச் சந்திக்கின்றார்கள். ஒரு கூட்டாச்சி, நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அரசாங்கம் ஒரு வேறு முகத்தைக் காட்டிக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையிலே நீங்கள் வடகிழக்கிலே செறிந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் நோக்கம் பற்றியும், அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் இறுதியாக என்ன கூறுகின்றீர்கள்?   பதில்:- உண்மையிலேயே தமிழ் மக்களுடைய உரிமைகளை, சுயநிர்ணயத்தை வென்றெடுப்பதற்கு ஒரு அடையாளச் சின்னமாக இருப்பது தமிழத் தேசியக் கூட்டமைப்புத் தான். இந்த நேரத்திலே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டும். முக்கியமாக இந்தமண் எங்களின் சொந்த மண் என்று கட்டிக் காத்த எங்களுடைய சொத்துக்களை வாரிக்கொண்டு போகின்றார்கள். அதாவது மரத்தை அறுத்துக் கொண்டு போகின்றார்கள், கிரவளை வாரிக்கொண்டு போகின்றார்கள், மணலை எடுத்துக் கொண்டு போகின்றார்கள். இந்த தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி தையல் மெசினைக் கொடுத்து, கிரவளை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி, பத்தாயிரம் ரூபா காசைக் கொடுத்து மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். மக்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதே என்னுடைய ஒரு முக்கியமான ஒரு வேண்டுகோளாக நான் மக்களிடம் விடுக்கின்றேன். எங்களுடைய சுயநிர்ணயத்தை, தன்னாட்சியை நிலைப்படுத்த ஒரு அடையாளச் சின்னமாக இருக்கின்ற இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றினைந்து இந்த வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து அதில் போட்டியிடுகின்றவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு மக்கள் அணைவரும் ஒன்றுமையாக ஒன்றுழைக்க வேண்டுமென்று மக்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி இதுவரை நேரமும் உங்களுடைய வேலைப்பளு இருந்த பொழுதிலும் எங்களது கலையகத்துக்கு வந்து இந்த நேர்காணலை வழங்கியமைக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SHARE