தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் பத்திரிகையின் 100வது வார இதழ் வெளிவருகின்ற இத்தருணத்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றேன். பிராந்திய ரீதியாக வவுனியா மாவட்டத்தில் இந்த வெளியீட்டினைச் செய்துவருகின்றார்கள். அவர்களுடைய பணி தொடர வாழ்த்துகின்றேன். சுதந்திரமாக, கன்னியமாக, நிதானமாக, உண்மையை எப்பொழுதும் கடைப்பிடித்து எங்களுடைய மக்களுக்காக தங்களுடைய சேவையினை ஆற்றவேண்டுமென்று நான் அவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
இரா.சம்பந்தன்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
யாழ்ப்பாணம்
15.10.2014
தினப்புயல் 100ஆவது ஏடு
வாழ்க,வளர்க!
‘தினப்புயல்’; ஏடு, 100ஆவது ஏடு வார இதழ் சிறப்புற வெளிவர இருப்பதறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் ஊடகசுதந்திரம், ஜனநாயக அடிப்படை உரிமைகள் குற்றுயிராக்கப்பட்டுள்ளமையை யாவரும் அறிவர். எத்தனையோ ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், காணாமற்போயுமுள்ளனர். தலைமறைவாக இருந்துவருவோர், வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். ஊடகநிறுவனங்கள் நேரடியாகவே குண்டுவீச்சுக்கும,; துப்பாக்கிவேட்டுக்கும் இலக்காகி தீக்கிரையாக்கப்பட்டதுமான வரலாறு நீண்டுசெல்கிறது.
இக் காலகட்டத்தில் ஊடகசுதந்திரம் ஆட்சியினதும் இராணுவத்தினதும் அடக்குமுறை ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் துணிவுடன் ஆக்கபூர்வமான செய்திகளைக்தாங்கி தினப்புயல் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வெளிவருகிறது. எம் மக்களின் விடுதலைக்கும் விடிவுக்கும் உறுதியுடன் துணிச்சலுடன் கருத்துக்களைமுன் வைத்துகொள்கைப்பற்று, இலட்சிய வேட்கை கொண்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் ‘தினப்புயல்’சிறப்புடன் வெளிவருவதுடன் மக்கள் மனங்களைவெல்லும் சக்தியாக மலரவேண்டும் எனவும் வாழ்த்தி நிற்கின்றேன். இப்பணிகாலத்தின் தேவையாகும்.
மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ)
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலை வர் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் பத்திரிகையின் வளர்ச்சியை முன்னிட்டு எனது பாராட்டுக்கள். என்னால் இயன்ற உதவிகளை இப்பத்திரிகைக்குச் செய்ய முடியவில்லை. என்றாலும் என்னுடைய உள்ளத்து ஆதங்கம் இப்பத்திரிகை வளரவேண்டும். அதுமட்டுமல்லாது தினசரியாகவும் வரவேண்டும். இதுவே எனது அவா. கடந்த 02 வருடகாலங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நடுநிலைமையாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்து.
வடமாகாண தேர்தல் காலங்களில் இப்பத்திரிகையானது தமிழ்த்தேசியத்தினை முன்னிலைப்படுத்தி, இருசாராரினையும் நடுநிலைப்படுத்தி செயற்பட்டமையைக் காணக்கூடியதாகவிருந்தது. அதிகமாக இப்பத்திரிகையில் தமிழ் மக்களின் வரலாறுகள் பொறிக்கப்பட்டதாகவே ஒவ்வொரு வாரமும் அமைந்திருக்கும். அந்த வகையில் திம்பு முதல் டோக்கியே என்ற கட்டுரை தமிழ் மக்களின் வரலாற்றினை உள்ளடக்கி வெளிவந்ததொன்று. நீண்டகாலமாக இப்பத்திரிகையின் செயற்பாடுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் பத்திரிகை 02வது வருடத்தில் காலடிவைத்திருக்கின்றது. ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல. அதற்கு உங்களுடைய பத்திரிகை நிறுவனத்திலுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இப் பத்திரிகையினூடாக இந்த நாட்டிலும், வடமாகாணத்திலும், குறிப்பாக வவுனியா மாவட்டத்திலும் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அறிந்துகொள்வதற்கு பங்களிப்பினைச் செய்கின்றது. தொடர்ந்தும் இப்பத்திரிகையானது பக்கச்சார்பில்லாமல் உண்மையாக செயற்படும் என்று நம்புவதுடன் தொடர்ந்தும் உண்மையான விடயங்களை வெளியிடவேண்டும். இன்னும் பலவருடங்கள் உங்களுடைய சேவை கிடைப்பதற்கு எனது அமைச்சின் சார்பிலும், அமைச்சர் என்கின்ற வகையிலும், மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
பிராந்திய தமிழ் பத்திரிகை என்பது இரு வருடங்களைக் எட்டியிருக்கின்றது என்பது பெருமைக்குரிய விடயம். ஒரு பத்திரிகையை தொடர்ந்து வெளியிடுவது என்பது இலகுவான காரியமல்ல. அதற்குத் தேவையான விளம்பரங்கள், அதனைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான ஏனைய வசதிகள் அனைத்தும் ஒன்றுசேர்கின்ற பொழுதுதான் ஒரு புதினப்பத்திரிகையை தொடர்ச்சியாக நடாத்தமுடியும். ஒரு வாராந்த பத்திரிகையாக இருந்தாலும் இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாவது வருடத்தில் கால்பதிப்பது என்பது உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய விடயமும் கூட.
இலங்கை போன்ற நாடுகளில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஒரு பத்திரிகையை உண்மைத்தன்மையுடனும், நடுநிலையாகவும் நடத்துவது என்பது சாதாரணவிடயமல்ல. அவ்வாறான நிலைமைகளுக்குள் வன்னி மண்ணிலிருந்து தினப்புயல் பத்திரிகை வருவதானது உண்மையாகவே அதனுடைய நேர்மை, சவால்களுக்கு மத்தியிலிருந்து பத்திரிகையை வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. இவை எல்லாவற்றையும் கடந்து தினப்புயல் வந்துகொண்டிருக்கின்றது என்றால் நிச்சயமாக அதனது ஆசிரியர் குலாத்தையும், ஏனைய ஊழியர்களையும் நாங்கள் இத்தருணத்தில் வாழ்த்துகின்றோம். அது மாத்திரமல்லாமல் பாரிய பிரச்சினைகளுக்குள்ளிருக்கக்கூடிய தமிழினத்திற்கான விடுதலை, அவர்களுடைய எதிர்கால அபிவிருத்திகள் இவை எல்லாவற்றையும் மையமாகக் கொண்டு தினப்புயல் பத்திரிகை தொடர்ந்து செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் வாராந்தப் பத்திரிகை 100வது இதழில் காலடி எடுத்துவைக்கப் போகின்றது என்ற விடயம் மகிழ்ச்சியினைத் தருகின்றது. வன்னி மாவட்டத்திலே இப்பத்திரிகை முதல் காலடி எடுத்து வைக்கின்றபொழுது குறுகிய காலப்பகுதிக்குள் தான் வெளிவரும் என பலர் கூறினார்கள். உண்மையிலே நேர்த்தியான முறையிலும், பல பிரச்சினைகளை எதிர்நோக்கியும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கருத்துக்களைக் கூறுகின்றபொழுது பல்வேறு நெருக்கடிக்குள்ளும், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் இப்பத்திரிகை தவழ்ந்து வளர்ந்து 100வது இதழில் காலடிவைத்து 02வருடங்களைக் கடக்கின்றது என்பது மகத்தானது.
இப்பத்திரிகைக் குடும்பம் மிகவும் கடினப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நேர்த்தியான, நேர்மையான, நடுநிலையான செயற்பாட்டினால் இன்று வளர்ந்து நிற்கின்றது. இப்பத்திரிகையிலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நியாயமான முறையிலே, யார் தவறு செய்தாலும் அதனைப் பிழை என்று கூறுகின்ற வகையில் அவர்களுடைய நேர்த்தி பேனாமுனையிலே தென்படுகின்றது. அவ்வாறு செயற்பட்டு மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கிறது. இனப்பிரச்சினை, வாழ்வாதாரம் தொடர்பாக தொடர்ந்தும் இப்பத்திரிகையானது குரல்கொடுத்து வரவேண்டும். அது மட்டுமல்லாது மக்களின் இறைமைகள் பறிக்கப்படுகின்ற போதெல்லாம் இப்பத்திரிகையானது முன்னின்று குரல்கொடுத்தது. மேலும் இப்பத்திரிகை தொடர்ந்தும் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல்கொடுக்கவேண்டும் என வாழ்த்தி நிற்கின்றேன்.
வடமாகாணசபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் வாரப் பத்திரிகை தனது 100வது இதழை வெளியிடுவதை முன்னிட்டு வாழ்த்துச்செய்தியினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். வன்னிப் பகுதியில் வவுனியா நகரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்த பத்திரிகை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடந்த 02 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருப்பது சாதனையாகும். ஊடகத்துறையில் ஒரு பத்திரிகை வெளியிடும்பொழுது பல்வேறு நெருக்கடிகளை முகங்கொடுக்கவேண்டும். அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 100வது வார இதழாக தடம்பதித்து 02 ஆண்டுகளை கடந்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியினைத் தருகின்றது. அரசியல் கட்டுரைகளைத் தாங்கி மிக நெருக்கடியான காலகட்டத்தில் வன்னியிலிருந்து வெளிவருவது என்பது மிகப்பெரிய சாதனை.
தொடர்ச்சியாக இந்த இதழ் வெளிவந்து ஆயிரமாவது இலக்கினையும் தாண்டி வெற்றியடையவேண்டும். தொடர்ந்து தினசரிப் பத்திரிகை என்ற நிலையினை எட்டவேண்டும் என வாழ்த்துகின்றேன். இதில் பணியாற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து தினப்புயல் பத்திரிகை தினசரியாக வெளிவர நானும் எதிர்பார்க்கின்றேன்.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
இன்றைய கால கட்டத்தின் ஊடகம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். நூட்டில் நடப்பவற்றை எவ்வித மெருகூட்டல் எதுவுமின்றி உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துச்செல்வதே ஊடகங்களின் சிறப்பியல்பாகும்.
ஆத்தகைய ஊடகங்களுல் ஒளி வீசிக்கொண்டிருப்பது மட்டுமன்றி எதுவித பக்க சார்பின்றி நடுநிலையாக வாரம்தோறும் புயல் போல செய்திகளை விரைவாக அனைத்து மக்களுக்கும் சென்றடைவது மட்டும் அன்றி செய்திகளை தெளிவாகவும், விரிவாகவும் பாமர மக்களைக் கூட கவரக்கூடிய வகையில் திகழ்ந்து விளங்கும் ஊடகமான தினப்புயல் பத்திரிகை இன்று 100வது வெளியீட்டினை கொண்டாடுகிறது. இப்பத்திரிகை இன்று எவ்வாறு துணிச்சலுடனும், ஊக்கத்துடனும், நியாயத்துடனும் செயற்படுகிறதோ அதே போன்று எதிர்வரும் காலங்களிலும் செயற்பட எமது வாழ்த்துக்கள்.