திருமணம் எனும் நிக்காஹ்…! நஸ்ரியாவுக்கு முதல் படமே, கடைசி படமாக…!

602

 

2006-ஆம் வருடம் பலுங்கு என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். பரமணி, ஒரு நாள் வரும் ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டு மேட் டாட் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் நஸ்ரியா. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தன்னுடைய திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார் அனீஸ்.
நஸ்ரியா தமிழில் முதலில் நடிக்க கமிட்டானது திருமணம் எனும் நிக்காஹ் படமாக இருந்தாலும், அப்படம் வெளியாகும் முன்பே தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் தயாரான நேரம் படத்திலும் பின்னர் சற்குணம் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்திலும், கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நஸ்ரியாவின் நடிப்பில் முதலில் வெளிவந்த தமிழ்ப்படம்(?) நேரம்தான். இப்படம் அவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த நய்யாண்டி படம் படு தோல்விப்படம். ஆனாலும், நஸ்ரியாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
இதற்கடுத்து வெளிவந்த அட்லியின் ராஜா ராணி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்துபோனாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது நஸ்ரியாவின் கீர்த்தனா கேரக்டர். காதலரான ஆர்யாவை பிரதர் என்று அழைக்கும் நஸ்ரியாவின் வசனம் மிக பாப்புலர் ஆனது. அந்தப்படத்தில் தன் சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசினார் நஸ்ரியா. ராஜாராணி படத்துக்காக கடந்த வருடத்திற்கான அறிமுக நடிகைக்கான விஜய் அவார்ட்ஸ் விருதும் நஸ்ரியாவுக்குக் கிடைத்தது.
மலையாளத்திலும் இவர் நடிப்பில் படங்கள் வரிசையாக வெளிவந்தன. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பெங்களூர் டேஸ் படம் சூப்பர்ஹிட். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் கடைசிப்படம் இதுவே. காரணம்…. நடிகர் பஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் நடைபெற்றது. அப்போது அவர் நான் திருமணத்திற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அவர் சொன்னதைப்போலவே, தேடி வந்த பல பட வாய்ப்புகளையும் அதன் பிறகு அவர் தவிர்த்துவிட்டார்.
நஸ்ரியா – பஹத் பாசில் திருமணம் ஆகஸ்ட் 21ஆம் திகதி கேரளாவில் நடைபெறவிருக்கிறது. தமிழில் நஸ்ரியா நடித்து வெளியாகும் கடைசிப்படம் சில தினங்களுக்கு முன் வெளியான திருமணம் எனும் நிக்காஹ் படம்தான். தமிழில் நஸ்ரியா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடைசியாக வெளிவரும் படமாக அமைந்துவிட்டது திருமணம் எனும் நிக்காஹ்.

 

 nasria
Tags »
SHARE