திருமண உறவு மேம்பட….!

233
வாழ்க்கையில் திருமணம்  ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. இந்த தருணத்தில் கனவுகள் எல்லாம் மெய்ப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருவரிடமும் இருக்கும். ஆசைகள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எல்லாம் �ஏழாம் சொர்க்கமாக� சிலருக்கு கண்ணில் தெரிய ஆரம்பிக்கும்.ஆனால் நிஜத்தில் வாழ்க்கை அவ்வாறு இருப்பதில்லை. பெரியவர்கள் பார்த்து நடக்கும் திருமணமாக இருந்தாலும் அல்லது காதலித்து திருமணம் நடந்தாலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.

திருமணம் பற்றி பயமுறுத்தும் எண்ணங்களை மனதில் விதைக்கவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே.

காதல் என்பது ஒரு ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே இருக்கும் உறவுநிலை. ஆனால் திருமணம் என்பது வேறு.

அது இரு மனிதர்களிடையே இருக்கும் உறவுநிலை மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களுக்குக்கிடையே, இருவேறு கலாச்சாரங்களுக்கிடையே, இருவேறு சமூக உட்பிரிவுகளுக்கிடையே ஏற்படும் தொடர்பு நிலை அல்லது உறவுமுறை. ஆதலினாலேயே, காதலிக்கும்போது பிரச்சனைகள் குறைவாகவும், திருமண உறவில் பிரச்சனைகள் அதிகமாகவும் தெரியவருகின்றன.

காதலிக்காமல், பெற்றோர்கள் அல்லது மற்றவர்கள் பார்த்து நடக்கும்போது திருமணத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் எவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்?

எதிர்பார்ப்புகள் இருப்பது தவறில்லை. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். எவ்வித எதிர்பார்ப்பினையும் மனதில் வைத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை எப்போதும் மலர்ப் படுக்கையாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது முட்புதராகவும் காட்சியளிக்கிறது. அதில் பிரச்சனைகள் தோன்றத்தான் செய்கின்றன. சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் இருக்கின்றன. சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைப்பதில்லை. அந்தப் பிரச்சனைகளோடு நாம் வாழ, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

பெரிய கருத்து வேறுபாடுகள்தான் திருமண வாழ்க்கையினை பாதிக்கவல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சின்னச்சின்ன விஷயங்கள் கூட சிலசமயத்தில் பூதாகரமாக மாறக்கூடும்.

திருமணத்திற்கு முன்பும், திருமணமான புதிதிலும் ஆணும் பெண்ணும் ஒருவையொருவர் மிகவும் இம்ப்ரஸ் பண்ணவேண்டும் என்கிற நோக்கில் தன்னிடம் இல்லாத விஷயங்களை இருப்பதுபோல் காட்டிக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

மிகவும் இயல்பாக, தங்கள் பேச்சில், நடத்தையில் மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இல்லாத சொத்து மற்றும் இதர பொருளாதார விஷயங்களை இருப்பதுபோல் சொல்லுவதைத் தவிர்க்கவேண்டும்.

ஒரு மனிதனிடம் எல்லா விஷயங்களும் ப்ளஸ்ஸாக இருக்கும் என்று எந்தவித நியதியுமில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியாத விஷயங்கள் அவரிடம் இருக்கலாம். உதாரணமாக விடியற்காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் பழக்கம் ஒரு ஆணுக்கு இருக்கலாம். அல்லது எழுந்தவுடன் காபி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். அதனை தன்னை மணந்தவரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. தன்னை மணந்தவர் காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்திருக்கும் பழக்கம் உடையவராக இருந்து, காப்பிக்குப் பதில் டீ சப்பிடுபவராக இருந்தால், அவரிடம் நல்ல பெயரை வாங்கவேண்டும் என்கிற எண்ணத்தில், பொய் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

திருமணமான புதிதில் அல்லது முதலிரவு சமயத்தில், தன்னைப் பற்றி அடுத்தவரிடம் சொல்லிவிடவேண்டும் என்கிற அவசரத்தில், தன்னுடைய டையரியைஉரக்கப் படிக்கும் போக்கினையும் தவிர்த்தல் நல்லது.

இயல்பாக, உங்களை வெளிப்படுத்துங்கள். பழகப் பழகத்தான் உறவு நிலைகளில் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தன்னைப் பற்றியோ, தான் சார்ந்தவர்களின் அருமை- பெருமைகளையோ பறைசாற்றுதல் கூடாது. ஆரம்பக் காலங்களில் ஒருவரைப் பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அதனை பின் மாற்றுவது மிகக் கடினம்.

திருமண வாழ்வில் பிரச்சனைகள் உங்களால் ஏற்படுமானால் பரவாயில்லை. அருத்தவர்களுக்காக வீணாக உங்கள் வாழ்வைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். அனாவசியமாக அடுத்தவரின் குடும்பத்தினரைப் பற்றி எந்தவித கமெண்ட்டும் பண்ணாமலிருப்பது நல்லது. அதே சமயத்தில் தம்பதியர் இருவரும், மூன்றாம் மனிதர்களை, அவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும் அதனை அனுமதித்தல் கூடாது.

தன்னுடைய பெற்றோர்களை தங்களுடைய ஆளுமையில், திருமணமானதம்பதிகள் தங்கள், உறவுநிலைகளில் வெளிப்படுத்த வேண்டியதில்லை.உதாரணமாக தன் தந்தை தன் தாயாரை எப்படி நடத்தினாரோ, அதே மாதிரிதானும் தன் மனைவியை நடத்தவேண்டும். என்று நினைப்பது மிகவும்தவறானது. தன் தந்தையாரை அப்படியே பின்பற்றாமல், அவரிடம் இருந்தஅல்லது இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் பின்பற்றுவது நல்லது. அதேமாதிரி, திருமணமான பெண்ணும் தன் தாயைப் பின்பற்றலாம்.

வேறுபாடுகள் இல்லாத உறவே கிடையாது. தான் அதிகமாகப்படித்திருக்கின்றோம், அழகாக இருக்கிறோம், வசதியான சூழ்நிலையிலிருந்துவந்திருக்கிறோம் என்கிற பந்தா இல்லாமல், வேறுபாடுகளை மறந்து, ஒருநண்பனிடம் பழக முயலுவதைப்போல் இருங்கள்.

உங்களுடைய குறைகளை ஓப்பனாக சொல்லுவதும் அடுத்தவரிடம்குறைகளை கொஞ்சம் மறைமுகமாக விவாதிப்பதும் நல்லது. ஒருசகஜநிலைக்கு வரும்வரையில், மூன்றாவது மனிதரிடம் இருக்கும்உரையாடல்களில் எவ்வளவுக்கெவ்வளவு  நாகரிகப் போக்கினைகடைப்பிடிப்போமோ அந்தளவு திருமணமான புதிதில் கணவனுடனோ அல்லதுமனைவியுடனோ இருந்தால் பின்னாளில் உறவுநிலை மிகவும் திருப்தியாகஇருக்கும்.

திருமணமான புதிதில் அனைத்து பெற்றோர்களும் அறிவுறுத்துவது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றித்தான். ஒரு மனிதரிடம் பிரச்சனைகள் இருந்தும் அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்காக அந்த உறவுநிலையினில் நீடித்து இருப்பது அட்ஜெஸ்ட்மெண்ட்(சமரசம் செய்து கொள்ளுதல்) என்பதாகும்.

இது ஓரளவு, உறவுநிலையினைக் காப்பாற்ற வல்லது. உண்மையில் தேவையானது என்னவென்றால் அக்ஸெப்டென்ஸ்(ஏற்றுக்கொள்ளுதல்).

ஒரு மனிதரின் நெகட்டிவ்வான விஷயங்கள் தெரிந்தும் அவரிடம் எந்தவித வெறுப்புமில்லாமல், அந்த உறவுநிலையில் நீடித்து இருப்பது அக்ஸெப்டென்ஸ் என்பதாகும். திருமணமான ஆரம்பத்தில், அட்ஜெஸ்ட்மெண்டும் பின்னாளில் அக்ஸெப்டென்ஸீம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் நண்பனிடம் பழகுவதைப்போல் இருந்தால் எந்த பிரச்சனையுமில்லை.

 

SHARE