சிறிய நாடான இலங்கையில் பக்கத்து நாடுகளான இந்திய மற்றும் சீனாவின் பொருளாதார போட்டித் தன்மை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகர திட்டம் புதிய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என சீனா குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் முன்னர் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடனும் இந்தியாவுடனும் போட்டித் தன்மையுடன் கூடிய நெருங்கிய பொருளாதார உறவுகளை பேணி வந்தது. இதன்மூலம் இந்தியாவை பகைத்துக் கொள்ளும் சில திட்டங்களையும் இலங்கை செயற்படுத்தியதாக தெரியவருகிறது.
குறிப்பாக சீனாவின் ஆயுதக் கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்கு வந்த சம்பவம் இந்தியாவை பெரிதும் கோபமூட்டியதாக அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கம் சீனாவின் திட்டங்களை மீள்பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்கீழ் கொழும்பு துறைமுக நகர திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை குறைந்த செலவில் முன்னெடுக்க முடியுமானால் அதனை தொடர தயார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்ட வடக்கு அதிவேக வீதி திட்டத்தை முன்னெடுப்பதற்கு 245 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டத்தை 40 வீத குறைவான செலவில் முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுடன் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் உயர்மட்ட பேச்சுக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஆனால் சீனாவுடன் முன்னைய அரசாங்கம் இரகசிய உடன்படிக்கை மூலம் முன்னெடுத்த திட்டங்கள் தொடராது என அவர் கூறியுள்ளார்.
சீனாவுடன் உறவுகள் தொடரும்: ஜனாதிபதி
சீனாவுடனான தொடர்புகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீன ஜனாதிபதி ஷின் பிங்கிற்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ, இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கம் தொடர்பில் சிறந்த முறையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனாவின் முதலீடுகள் மற்றும் சீனாவுடன் இருக்கும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு முக்கியமானது எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.