தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்காக வாதாட வழக்கறிஞர் நியமனம்!

432

தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக வாதாட வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், பிரசாந்த், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டனர். பின்னர் இவர்கள் மீதும், ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பிடித்து வைத்திருந்த இலங்கை தமிழ் மீனவர்கள் மூவர் மீதும் போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போடப்பட்டது.

இலங்கை மல்லாஹம் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 30ம் தேதி இந்த வழக்கில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் மற்றும் இலங்கை தமிழ் மீனவர்கள் கமல் கிறிஸ்டியன், கில்சன், துசாந்தன் உள்ளிட்ட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தங்கச்சிமடம் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அவருகின்றனர். மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரியும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக வாதாட வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில், ”இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் தண்டனையை எதிர்த்து வாதாடுவதற்காக இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகராக உள்ள வழக்கறிஞர் அனில் சில்வாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து இலங்கை வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நகல் கிடைத்தவுடன், நாளையே இலங்கை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்.

எனவே, தற்போது தமிழகத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

SHARE