தென்னிலங்கை மீனவர்களை முல்லைத்தீவில் தடை செய்யும் தீர்மானம்..வடமாகாணசபையில் முன்மொழிந்தார் ரவிகரன்.

303

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ள நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடற்றொழில் வாய்ப்புக்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற தீர்மானம் சற்று முன் நிறைவேறியது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..
பிரேரணையின் சுவாரசிய  விடயமாக ,ரவிகரன் அவர்கள் “இப்படியே போனால் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்கள் குளங்களில் தான் மீன் பிடிக்க வேண்டி வரும்.எனவே  குளங்களை புனரமைக்கும் பணியை மாகாண விவசாய அமைச்சர் அவர்களும்,குளங்களில் மீன் விடும் பணியை மீன்பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சர் அவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரேரணையின் முழு வடிவம் வருமாறு
முல்லைத்தீவில் எமது மீனவர்களுடைய படகுகள் 1000 அளவில் உள்ளன. வெளிமாவட்ட மீனவர்களின் படகுகள் தற்போது 850 அளவில் உள்ளது. தற்போது வெளிமாவட்ட மீனவர்கள் எமது கரையில் வந்து வாடிகள் அமைத்து தொழில் செய்யும் அளவுக்கு அந்நிய ஆதிக்கம் மிகவும் அதிகமாகிவிட்டது.
கொக்கிளாயில் 300க்கு மேற்பட்ட படகுகளும் நாயாற்றில் 300க்கு மேற்பட்ட படகுகளும் தற்போது அட்டைத்தொழில் என்ற போர்வையில் சாலைப்பகுதியில் 250க்கு மேற்பட்ட படகுகளும் மொத்தமாக 850 படகுகளுக்கு மேல் வெளிமாவட்ட மீனவர்கள் தொழில் செய்கின்றார்கள்.
தனியாக கடற்றொழில் திணைக்களம் முல்லைத்தீவில் இருக்கின்றது. இவர்கள் என்ன செய்கின்றார்கள்? வெளிமாவட்ட மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்களா?
இலங்கை அரசின் கடற்தொழில் நீரியல் வளச்சட்டம் முல்லைத்தீவில் இப்படித்தொழில் செய்யலாம் என்று சொல்கின்றதா?
எங்களுடைய மீனுவர்கள் இறுதிப்போரில் தொழில்கள் யாவையும் முற்றாக இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக்கொண்டு தங்களுடைய இயல்புகளுக்கேற்ப சிறிய அளவில் தொழில் செய்கின்றார்கள்.
உதாரணம் – சூடை வலை 1 1/8 அல்லது 1 3/16
இதனுடைய இறக்கம் 350 அடை அல்லது கண் நீளம் – 1500 கண் சுமார் 20 வலைகள் போட்டு தொழில் செய்கின்றார்கள். இதற்கு மேல் வலைகள் போடுவதற்கு வழியில்லைஃ வசதியில்லை. வெளிமாவட்ட மீனவர்கள் இதே வலைகளை சூடைவலை இறக்கம் 350 கண் இதனுடன் மூன்று வலைகளை கீழ்நோக்கி இணைத்து 1050 கண் இறக்கமாகவும் நீளமாக 40 அல்லது 50 வலைகள் போட்டு தொழில் செய்கின்றார்கள். கடலில் நீண்ட தூரத்துக்கும் மிகவும் ஆழத்துக்கும் இவர்களுடைய வலைகள் விடப்படுகின்றது. இவை தவிர லைற்கோஸ் எனப்படும் வெளிச்சம் போட்டு மீன்பிடித்தல் டைனமேற் வெடிவைத்து மீன்பிடித்தல் சுருக்கு வலை மூலம் மீன்பிடித்தல்  போன்ற சட்டவிரோதமான முறைகளில் எல்லாம் தொழில் செய்கின்றார்கள். இதைவிட மீன்பிடிமுறைகளில் நவீன மீன்பிடி முறைகள் எமது மீனவர்களுக்கு இன்று வரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த வசதிகள் அற்ற நிலையில் மீனவர்களுக்கு மானியங்களும் இல்லை. ஆனால் இவை யாவும் தென்னிலங்கை மீனவர்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றது ஃ வழங்கப்பட்டுள்ளது.
உதாரணம்  1. பல நாள் கலங்கள் இங்கு இல்லை
2. ஒரு நாள் கலம் இங்கு இல்லை
3. செய்மதி வழிகாட்டி
4. மீன் இனங்காட்டி
5. குதிரைவலு கூடிய இயந்திரங்கள்
6. சுழி ஓடி மீன்பிடித்தல் எமது மீனவர்கள் 15 குதிரைவலு வெளியிணைப்பு இயந்திரத்துக்கு மேல் பாவிக்க முடியாது. தென்னிலங்கை மீனவர்கள் 25 குதிரைவலு இயந்திரங்கள் பாவிக்கலாம்ஃபாவிக்கின்றார்கள்
இது தவிர கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான எமது கடற்கரையோரத்தில் 87 கரவலைப்பாடுகள் உள்ளன. இவற்றில் பல கரவலைப்பாடுகளில் வெளிமாவட்ட மீனவர்கள் தான் தொழில் செய்கின்றார்கள்.
எமது மீனவர்கள் 87 பேருக்கு மேல் கரவலைத்தொழில் செய்வதற்கு ஆவலாக உள்ளார்கள். பலர் அத்தொழில் உபகரணங்களுடன் இருக்கின்றார்கள். இப்பகுதியைச்சேர்ந்த மீனவர்களுக்கு பலருக்கு கரவலைப்பாடுகள் வழங்கப்படவில்லை.
முல்லைத்தீவைச்சேர்ந்த எவராவது வேறு இடங்களுக்கு சென்று அத்துமீறியோ அனுமதிகளின்றியோ சட்டம் ஒழுங்கை மீறியோ தொழில் செய்கின்றார்களா?
வாடி அமைத்து தொழில் செய்வதற்கு தொழில் அனுமதிப்பத்திரம் இருக்கவேண்டும். இது இல்லாமல் தொழில் செய்கின்றார்கள். இது பட்டப்பகல் கொள்ளையாக தெரியவில்லையா?
அட்டை பிடிக்க அனுமதி வைத்திருப்பவர்கள் 20 கடல்மைல்கள் தூரத்துக்கப்பால் தொழில் செய்யவேண்டும் என்று அனுமதிப்பத்திரத்தில் உள்ளது. அதை மீறி கரையில் அட்டைத்தொழில் செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
கடந்த காலங்களில் நாட்டின் அசாதாரண நிலையைப்பயன்படுத்தி கொக்கிளாயில் வந்து குடியேறிய தென்னிலங்கை மீனவர்கள் இன்று வரை அத்துமீறிய வகையில் எமது மாவட்ட மீனவர்களுக்குச் சொந்தமான கடல்வளங்களை அபகரித்து கொண்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் நாயாற்றிலும் தற்போது அட்டைத்தொழில் என்ற போர்வையில் சாலையிலும் எமது கடல்வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுகளால் எமது மாவட்டத்தின் கடல்வள வருமானத்தின் மிகப்பெரும்பங்கு வெளிமாவட்ட மீனவர்களுக்கே செல்கின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல்வளங்கள் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கே சொந்தம். கடல்தொழிலை காரணம் காட்டி தென்னிலங்கை மீனவர்கள் முல்லை மாவட்டத்தின் எப்பகுதியிலும் தங்கியிருத்தலோ வந்து வந்து செல்வதோ தடை செய்யப்படுதல் வேண்டும்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன்பிடித்தலை இலங்கையின் சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கும் அரசியல் கனவான்களின் கண்ணில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் தென்இலங்கை மீனவர்களின் இந்த நடவடிக்கைகள் தெரியவில்லையா?
இலங்கை சட்டம் நாட்டிற்குள்ளேயே ஒரு பகுதி மீனவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறதா?
பிரேரணை
பல அழிவுகளைச்சந்தித்து நிர்க்கதியாக இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை சீரான முறையில் ஏற்படுத்திக்கொடுக்காமல் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியிருப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டுமென கௌரவ மத்திய கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரையும் மாண்புமிகு சனாதிபதி அவர்களையும் இச்சபை கோருகின்றது.
SHARE