எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிதியைக் கொண்டு, பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை போட்டி
எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளதாக கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கும் என அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தமது வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்துள்ளது. எனினும் நிறுத்த போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரைஅந்த கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவரை பொது வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது.
இதனிடையே லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து மற்றுமொரு வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகின்றன.
இந்த வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.