தேர்தல்களை நடத்தப் பணம் இல்லை என்றால் உள்ளுராட்சி மன்றங்களிடம் உதவி கோரலாம்

69

தேர்தலை நடாத்துவதற்கு நிதி இன்மை காணப்படுமாயின் உள்ளுராட்சி மன்றங்களிடம் இருந்து ஒரு பகுதி நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படியான அரச விதிமுறைகளை அமைத்துப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தனது பரிந்துரையினை அனுப்பி வைத்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என உறுதியான முடிவைக் கொண்டிருக்கின்றமை வரவேற்கத்தக்கது. தேர்தல்களும் அடிப்படை உரிமைகளே. அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துத் தெரிப்பதற்கான சுதந்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல்களும் மக்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்கான ஓர் பொறிமுறையாகும். கடந்த காலங்களில் நீதித்துறையும் தேர்தல்களை மக்களின் கருத்துச் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தி நாட்டில் தீர்ப்புக்களை அளித்துள்ளன. எனினும் இம்முறையும் அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதற்கான உத்திகளை திணிக்க முற்படுவதாக உணர முடிகின்றது. அதில் நாட்டில் நிலவும் நிதிப்பற்றாக்குறையை பிரதான விடயமாகக் அது காட்ட எத்தனிக்கின்றது.
நாட்டின் மத்திய அரசிடம் நிதிப்பற்றாக்குறை இருப்பதை ஏற்றால் கூட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்ற வகையில் உள்ளுராட்சி மன்றங்களிடம் அவர்களது வருமானத்தில் இருந்து முறைப்படியான அரச ஒழுங்கு விதிகளை அமைத்துப் பெற்றாவது தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். ஏற்கனவே நாம் உள்ளராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தினை சபைகளுக்கு சமர்ப்பித்துவிட்டோம்.அவ்வாறிருப்பினும்; முறைப்படியான கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து  கிடைக்கப்பெறின் எமது சபைகளில் அக் கோரிக்கையினைச் சமர்ப்பித்து எமது வரவு செலவுத்திட்டத்தில் வகைமாற்றத்தினைச் செய்வதன் ஊடாக பிரதேச சபை என்ற வகையில் மேலதிகமாகத் தேவையான அனுமதிகளைப் பெற்று எம்மால் இயன்ற நிதி உதவியினை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களின் வருமானத்தில் அதிக, நடுத்தர வருமானம் பெறும் சபைகள் இதற்காகப் பங்களிக்க முடியும். உள்ளுராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளுக்கே நித்ப்பற்றாக்குறை காணப்படுகையில் இது தேவையற்ற பரிந்துரை என எவராவது கூறலாம். அடிப்படையில் கட்டிடங்களைக் கட்டுவதும் வீதிகளை அமைப்பதும் மட்டும் அபிவிருத்தியல்ல. ஜனநாயகத்தினைக் கட்டியெழுப்புவதும் முக்கிய அபிவிருத்தியாகும். தேர்தல்கள் வாயிலாக ஜனநாயகம் வலுவடையும். எனவே தேர்தல்களையும் அபிவிருத்தியாகக் கருதி உள்ளராட்சி மன்றங்களான நாம் முறையான நிர்வாக நடைமுறைகளை வகுத்து நிதி ஒதுக்குவதில் தடைகளில்லை என்பதை உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் தவிசாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்வதாக தியாகராஜா நிரோஷ் குறிப்பிட்டுள்ளார்.
SHARE