தொடரும் சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை

440
கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப் படுக்கையில் சட்டவிரோத மண் அகழ்வு தற்போதும் தொடர்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த பொறுப்பு வாய்ந்த எவருமே முன்வரவில்லை என அந்தக் கிராம மக்களும் கிராம அபிவிருத்திச் சங்கமும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்த வடக்கு மாகாண சபையின் உரிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் தினமும் சட்டவிரோதமாக மணல் மண் களவாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பல உழவு இயந்திரங்கள் மூலமாக ஏற்றிச் செல்லப்படுவதாகவும் இதனால் மக்கள் வசிப்பிடம், வயல் நிலங்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

அதுமட்டுமின்றி அப்பகுதியிலுள்ள பாரிய பயன்தரு மரங்கள் சரிந்து விழுந்து வீணாகப் போவதாகவும் இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அபபகுதி மக்கள் சுட்டிக் கட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும் இதுவரை பொறுப்பான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

இவ்விடயத்தில் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய வடமாகாண அமைச்சர் உடனடியாகக் கவனம் செலுத்தி விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

SHARE