நான் அமைச்சு பதவி எடுத்த பின் முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஜக்கிய தேசிய கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு புஸ்ஸலாவ, வட்டகொடை, லிந்துலை, மெராயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, கெம்பியன், அப்கட் போன்ற பிரதேசங்களில் வரவேற்பு அளிக்கும் நிகழ்வு 23.08.2015 அன்று இடம்பெற்றது.
இந்த வரவேற்பு அளிக்கும் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும், மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…
அதுமட்டுமில்லமல் வீட்டு பிரச்சினை, காணி பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை போன்றவற்றையும் தீர்த்துக் கொடுப்பேன்.
மலையக மக்கள் நினைத்தது போல் மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் இனி அராஜக ஆட்சி நடக்காது. கடந்த காலங்களில் மலையக மக்களை மரியாதை குறைவாக பேசியவர்கள் போல் நான் பேச மட்டேன். நான் மக்களை மரியாதையுடன் நடத்துவேன். மலையகத்தில் இனி அரசியல் ரீதியாக பழி வாங்குதல் நடக்காது.
கடந்த காலங்களில் 75 வருட காலமாக அரசியல் செய்தவர்கள் 30 வருடமாக அமைச்சு பதவிகள் வைத்திருந்தவர்கள் மலையகத்தில் மலையக மக்களுக்கு அபிவிருத்தி உட்பட பல வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்தவில்லை.
இன்று நானும் இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் சேர்ந்து 5 வருடங்களில் மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து செய்யவுள்ளோம்.
இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு மக்கள் எங்களுடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
மலையகத்தில் தனிவீடு திட்டம், பல்கலைகழகம் உருவாக்குதல், மலையகஇளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் பேட்டை அமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை துரித படுத்துவதாக தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)