தோட்டத் தொழிலாளர் குடும்பங்க​ளுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

480

ranil vs Manoதோட்டத் தொழிலாளர் குடும்பங்க​ளுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

50,000 வீடுகளைக் கட்டி தருவதாக, கடந்த வரவு செலவு திட்டத்தின் போது நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்களித்தார்.

அதற்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தோட்டத்துறை தரிசு நிலங்களை தொழிலாளர் குடும்பங்களுக்கு குறிப்பாக, தோட்டத்துறை இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் போவதாக கூறியிருந்தார். ஆனால், இந்த இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் எதிர்காலத்தில் எமது ஆட்சி உருவாகும் பட்சத்தில், தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா பத்து பேர்ச்சஸ் காணி ஒதுக்கி தரப்படும் என்ற உறுதிமொழி, எதிரணி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட  வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் எழுத்துமூலமாக கோரியுள்ளார்.

இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இதுபற்றி நேரிலும் உரையாட விரும்பி உள்ளதாகவும், எதிரணி கூட்டில் தமது கட்சி இடம்பெறுவதற்கு இந்த உடன்பாடு அத்தியாவசமானது எனவும் மனோ கணேசன், தமது எழுத்து மூல கோரிக்கையில் கூறியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறிப்பில்,

மலையக தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏறக்குறைய 120,000 எக்டெர் நிலம் இருகின்றது. இதில் சுமார் 38,000 எக்டெர் தோட்டத்துறை தரிசு நில பரப்பும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் தனி வீடுகள் தேவை. இந்நிலையில் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுகின்றன.

இத்துனை வருடங்கள் ஆகியும் ஆக சுமார் 23,000 வீடுகளே மலையக தோட்ட துறையில் கட்டப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் போனால் இன்னமும் ஐம்பது வருடங்களானாலும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க போவதில்லை.

வழமைப்போல் நிதியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு தொழிலாள குடும்பங்களுக்கு வழங்கப்படட்டும். அதேவேளை இதற்கு புறம்பாக ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்துக்கும் பத்து பேர்ச் நிலம் வழங்கப்பட வேண்டும் என நான் கோருகிறேன்.

நாடு முழுக்க நகரங்களில் தொழில் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக உடன்பிறப்புகள், தங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி இந்நிலங்களில் தங்கள் வீடுகளை கட்டிக்கொள்வார்கள்.

அதற்கு நாம் இடம் வழங்க வேண்டும். மலையக வீடமைப்பு அதிகாரசபை ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அனைத்து மலையக வீடமைப்பு செயற்பாடுகளும் கூட்டிணைக்கப்பட வேண்டும்.

இதன்மூலமாகவே 1800ம் ஆண்டுகள் முதல் இந்நாட்டில் வாடகை வீட்டு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக தொழிலாள சமூகத்தை வீட்டுரிமை சமூகமாக மாற்ற முடியும் என நான் திடமாக கருதுகின்றேன்.

இனிமேலும் மலையக மக்கள், குறிப்பாக தோட்டதுறை மக்கள் வீடற்ற சமூகமாக இந்நாட்டில் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்நிலை முடிவு பெறும் காலம் வந்து விட்டது. இந்த தேர்தல் மூட்ட வேளையில், இதற்கான ஏற்பாடுகள் தீர்மானிக்கப்படாவிட்டால், இது இனி ஒருபோதும் நடைபெறாது என நான் நம்புகிறேன்.

இந்த செய்தியை எடுகோளாக கொள்ளும்படி, அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள, மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE