தோல்வியால் மெஸ்சி வருத்தம்

19

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர். அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது.

தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது. இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது. சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம்.

இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம். இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார். இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.

SHARE