த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து

243
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றமைக்காக மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கும் தமிழ்மக்கள் அரசியற் தீர்வொன்றை எட்டுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

அத்தோடு சிறி லங்கா அரசுக்கும் பன்னாட்டுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தங்கள் தலைமை என்பதை உறுதிபடக் கூறியுள்ளனர். நீண்டகாலத் தமிழர் சிக்கல்களுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது தெளிவுபடுத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீண்ட காலமாக இணைந்து செயற்படும் அமைப்பாகக் கனடியத் தமிழர் பேரவை இருந்து வருகிறது. இந்த வகையிற் தமிழ்மக்களுக்கான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதிற் பன்னாட்டுக் குமுகம் குறிப்பாக இந்தியா முழுமையான உதவிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

சிறிலங்கா மக்கள் மீண்டுமொரு முறை நல்ல மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். இது இவ்வாண்டு சனவரியில் நடந்த அதிபர் (சனாதிபதி) தேர்தலுடன் தொடங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. இரணில் விக்கிரமசிக்க மற்றும் சிறி லங்கா அதிபர் திரு. சிறிசேன ஆகியோரை வாழ்த்துவதோடு கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் முன்னேற்றப் பணிகளை தொடரவேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.

எப்போதும் போல் கனடியத் தமிழர் பேரவை தமிழ் மக்களின் விருப்புகளை ஏற்றுக்கொள்வதோடு அவற்றிற்கு மதிப்பளிப்பளிக்கிறது. தமிழ் மக்கள் மதிப்போடும் அமைதியோடும் சமாதானத்தோடும் சமஉரிமையோடும் வாழும் நிலையை உருவாக்குவதற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் அதன் மதிப்புக்குரிய தலைவர் இரா. சம்பந்தனதும் நெடும் பயணத்துக்கு கனடியத் தமிழர் பேரவை தோள் கொடுத்து நிற்கிறது.

 

SHARE