த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்

628

தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் யாரால் ஆளப்பட்டார்களோ, அந்த நாடுகளிடமே சென்று அடைக்கலம் புகுந்திருப்பதுதான் வரலாற்றுப் புதுமை யாகும். ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கும், ஆதரவின்மைக்கும் அடிப்படை காரணமாக இருந்தவர்கள், இலங்கையை இறுதியாக ஆண்ட பிரித்தானியர்களேயாகும். பல்லாண்டு காலம் இலங்கையை கைப்பற்றி அரசாண்டவர்கள், சுதந்திரம் வழங்கி நாட்டை விட்டு வெளியேறும் போது பெரும்பான்மை என்ற ஒரே காரணத்துக்காக சிங்களவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு சென்றவர்கள், நாட்டிலுள்ள அனைத்து உரிமைகளுக்கும் உரித்தான தமிழினத்தை அதே சிங்களவரின் ஆதிக்கத்தின் கீழ் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசுகளின் வன்முறைக்கு ஆளான தமிழினம், அஹிம்சை முறை யில் போராடி, இறுதியில் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தமிழருக்கான உரிமை, உடமை, உயிர் என்பன பறிக்கப்பட்ட நிலையில், வசதி வாய்ப்பை பெற்ற தமிழ் மக்கள் அகதிக் கோரிக்கையோடு புலம்பெயர்ந்தார்கள். தம்மை நட்டாற்றில் விட்ட பிரித்தானியாவிலும், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் தஞ்சமடையும் நிலை தமிழருக்கு ஏற்பட்டது. யுத்தத்தின் பின்பும் இலங்கையில் தொடரும் தமி ழின அழிப்பை தடுத்து விடும் நோக்கோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்கள். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை தாம்வாழும் நாடுகளை தளமாக வைத்து புலம்பெயர்ந்த தமி ழினம் எடுக்க முற்பட்டிருப்பதானது, முக்கியமாக பிரித்தானிய அரசுக்கு முன்செய்த தவறுக்கான குற்ற உணர்வை தூண்டுவதாகவும், இறுதிப் போருக்கு உதவிய சர்வதேச நாடுகளுக்கு மனி தாபிமான கதவுகளை திறப்பதாகவும் அமைந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளே ஐ.நா மனித உரிமை பேரவையில் வெளிப்படுத்தப்படுகின்றன எனக் கொள்ளலாம்.

மகாபாரதத்தில் இடம்பெற்றது போன்று கௌரவர்களிடம் பஞ்ச பாண்டவர் நாடு கேட்டு, நகரங்கள் கேட்டு, கிராமங்கள் கேட்டு, ஊர் கேட்டு, வீடு கேட்டும் கிடைக்காதது போன்ற ஒரு நிலையில்தான் ஈழத் தமிழினம் இன்று இருக்கிறது. இந்த நிலையை உருவாக்கி விட்டவர்கள் பிரித்தானியர்களாக இருந்தபோதும், உரிமைக்கான வாய்ப்பை ஒன்றுபட்டு நின்று அணுகா மல் பிரிந்து நின்றதன் காரணமா கவே அது தமிழினத்தின் சாபக்கேடாக இன்றும் தொடர்கிறது. ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு ஒருபுறம், சமஸ்டி கேட்டு ஒருபுறம், ஆரம்ப காலத்திலேயே பிரிந்து நின்றதன் விளைவையே இன்று தமிழினம் அனுபவிக்கிறது.

தமிழரிடம் இருக்கும் ஒற்றுமையின்மையை புரிந்து கொண்டதன் காரணமாகவே சிங்கள ஆட்சியாளர்கள் தமது ஆதிக்கப்பிடியிலிருந்து சிறிதும் இறங்கி வராத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். சுகபோகத்துக்காக தமது இனத்தையே காட்டிக்கொடுக்க தயங்காத ஒரு கூட்டம் தமிழரிடம் இருக்கிறது என்பதும் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்த விடயம். இவற்றின் காரணமாகவே அன்று தொட்டு இன்றுவரை, போரின்போதும் சரி, அதன் பின்பும் சரி தமிழனை வைத்தே தனது இன அழிப்பு நடவடிக்கைகளை இலங்கையின் இனவாத அரசு மேற்கொண்டு வருகிறது.

பௌத்த மத வெறியர்களினதும், கடும்போக்கு சிங்கள இனத்தவரினதும், இனவாத அரசியல்வாதிகளினதும் தூண்டுதலின் பெயரில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருந்து இயக்குவது மஹிந்த அரசே. தமிழனத்தை அழிப்பதிலும், அவர்களது உரிமை களை பறிப்பதிலும், சமூக சீர்கேடுகளை திணிப்பதிலும், தமிழரின் நிலங்களை பறிப்பதிலும், மொழி, மதம், கல்வி என்பவற்றை சிதைப்பதிலும் இனவாதிக ளோடு கைகோர்த்து நிற்கிறது இலங்கை அரசு. அதற்கான அதிகாரங்களும், படை வலிமையும் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது. புலிகளை அழித்ததன் மூலம் அவர்களது ஆதிக்க சக்தி வலுப்பெற்றிருக்கிறது. பலவீனப்பட்ட தமிழினத்தை மேலும் முடங்கச் செய்வதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. இந்த அநியாயங்களுக்குக் கூட குரல் உயர்த்த முடியாதவர்களாகவே தாயக மக்களின் இன்றைய நிலை இருக்கிறது. அந்த அவலங்களையும், துயரங்களையும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லக் கூடியவர்களாக புலம்பெயர் தமிழ் மக்களே இன்று இருக்கிறார்கள்.

கல்வி வளர்ச்சியிலும் சரி, பொருளாதார வளத்திலும் சரி;, இனத்தின்பாலுள்ள உணர்விலும் கூட புலம்பெயர் தமிழ் மக்கள் வலுவுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், சரியான தலைமைத்துவம் இல்லாததன் பாதிப்பை அவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது. எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு என்று பல்வேறு கொள்கை உடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அது இயற்கையானது. ஆனால் தமிழினத்தை பொறுத்தவரை வடமாகாணசபை தேர்தலின்போது என்பது வீதத்திற்கும் மேற்பட்டவர்களின் தீர்மானம் ஒருமன தாகவே இருந்திருக்கிறது. ஆனால், புலம்பெயர்தேசத்தில், கனடாவில் மட்டும் நான்கு முக்கிய அமைப்புகள் தமிழரிடையே இருக்கின்றன. அது தவறான ஒன்றல்ல. ஆனால், ஒரே காரணத்துக்காகப் போராடும் தமிழ் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்க மறுப்பதுதான் தமிழ் மக்களுக்கிடையே விசனத்தை தோற்றுவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இவர்களது பணி அளப்பரியது. அதையே ஒவ்வொரு விடயத்திலும் இணைந்து செயற்பட்டால் மக்களும் தமது ஆதரவை தாமே முன்வந்து தருவார்கள். இலங்கை அரசால் விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கான தடையை இவர்கள் ஒன்றுபட்டு நின்று முகங்கொடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் இருந்த கால கட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலம் சிறந்துவிளங்கியது. தமிழ், முஸ்லிம், தமிழ் பேசும் மக்களும் ஒன்றினைக்கப் படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இருந்து வந்தது. அதன் பிற்பாடு சமாதா னப் பேச்சுவார்த்தைகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் விலகிச்சென்றதன் காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஓரங்கட்ட முடியும் என்கின்ற நிலைக்கு இலங்கையரசு வந்தது. இதன் காரண மாக பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மந்தகதியடைந்து மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. இதனையடுத்து தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என வேறுபடுத்தப்பட்டார்கள். கிழக்குமாகாணசபைத் தேர்தலின் போது தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தை வெளிப்படுத்தத்தொடங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு அல்வா கொடுத்தது எனலாம்.

அரசாங்கங்கள் காலத்திற்குக் காலம் மாற்றமடையலாம் கட்சிகளில் விரிசல்கள் ஏற்படலாம். ஆனால் தமிழினத்திற்கான தனித்துவம் என்றுமே தேவைப்படுகின்றது. தமிழ்மக்களுக்கான தனித்துவம் இல்லாமல் போகின்றபொழுதே இலங்கையரசிற்கு இலகுவாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை உடைப்பதற்கு சாதகமாக அமைந்துவிடும். விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலகட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பல்வறு முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை வன்னிப் பிரதேசத்தில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் காலப்போக்கில் அவற்றையெல்லாம் மறந்த தமிழ்பேசும் முஸ்லிம் சமுதாயத்தினர் அரசாங்கத்துடன் இணைந்து துதி பாட ஆரம்பித்தனர். இதன் காரண மாக இன்று அரசாங்கம் தமிழ் மக்களை உள்ளடக்கிய தமிழ்க் கட்சிகளை வௌ;வேறு அமைப்புக்களாக பிரித்து வைத்திருக்கின்றது. இதிலும் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற கட்சிகள் நடைபெற்ற வடமாகா ணசபை, கிழக்குமாகாணசபைத் தேர்தல்களின்போது ஒன்றிணைந்து போட்டியிட்டதன் காரண மாக வெற்றியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் வெற்றி பெற்றாலும் கூட அதிகாரங்களை வழங்க அரசு தாமதமாகவே இருந்துவருகின்றது.

இவ்வாறான நிலைமை தோன்றுவதற்கு காரணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையாக இருந்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவு களேயாகும். வடமாகாணசபைத் தேர்தலில் 3ஃ2 பெரும்பான்மையைப் பெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதிலுள்ள அங்கத்தவர்கள் வௌ;வேறாக பிரிந்துசென்று சத்தியப்பிரமாணங்களை செய்துகொண்டதானது உண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பல வீனத்தையே காட்டி நின்றது. இதனை அரசாங்கம் உள்வாங்கிக்கொண்டு வடமாகாணசபை வேறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேறு என்ற வகையில் அதிகாரப்பரவலாக்கலை இலங்கையரசு கட்டவீழ்த்துள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை எள்ளளவும் கணக்கெடுக்காத வகை யில் தமது செயற்பாடுகளை செயற்படுத்திவருகின்றனர். இது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தமிழ் மக்களிடையே இருக்கும் ஐக்கியத்தை வேறுபடுத்தும் செயலாகவே அமையப்பெறுகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், வடமா காணசபையும் இணைந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் அதுமட்டுமன்றி சோரம்போகக்கூடாது. ”கோவணம் கட்டினாலும் கொள்கை மாறக்கூடாது’ என்கின்ற நிலைப்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படவில்லையாயின், தமிழ் மக்களுக்கு உரிய சுயநிர்ணய உரி மைகள் அனைத்தும் இல்லாது போய்விடும். மதச்சுதந்திரம், காணிச்சுதந்திரம் என்பனவும் தற்பொழுது மங்கிவருகின்ற இந்தகாலகட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடைய ஒற்றுமை சீர்குலையுமாகவிருந்தால் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். அதுமட்டுமல்லாது ஆயுத கலாச்சார சூழ்நிலையில் செல்வதற்கும் இந்த தமிழ்க்கட்சிகள் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் போராட்டம் என்பது மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவ்வாறாயின் 25 ஆண்டுகள் கடந்துசெல்லவேண்டும். இதற்கிடையில் தமிழ்மக்களுடைய விழுமியங்களை பாதுகாக்கவும், தமிழ்க்கலாசாரங்களை கட்டியெழுப்பவும் தமிழ் மக்களுடைய பலம் அவசியம்.

அல்லாது போனால் அரசாங்கத்துடன் இணைந்து அரச அமைச்சர்களாக செயற்படும் முஸ்லிம் அரசியல் வாதிகள் போன்று அரசாங்கத்துடன் ஒன்றிப்பிணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் தமிழ்மக்களுடைய உரிமையை எள்ளளவும் எடுத்துரைக்கமுடியாத சூழ்நிலையேற்படும். அரசாங்கம் கொடுப்பதையே வாங்கியுண்ணும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். தன்மானம் உள்ள தமிழ்மக்களாய் தலைநிமிர்ந்து நிற்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடக்கம் வடமா காண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வரையும் ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமிழ்மக்களுக்கான விடிவினை பெற்றுக்கொடுக்கலாமேயன்றி எமது கட்சிக்குள்ளேயே பிரிவினை களை ஏற்படுத்தி வெற்றிபெறமுடியாது என்பதுதான் உண்மையான விடயமாகும். காலத்தின் தேவை கருதி தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டியதன் அவசியம் தமிழ்க்கட்சிகளுக்கும் உள்ளது.

– இரணியன் –

SHARE