நல்லாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

156

 

நல்லாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனும் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களில் மரம் சின்னத்தில் தனித்து களமிறங்கவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்குவகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். இந்த ஒற்றுமையானது முஸ்லிம்களின் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எண்ணுகின்றோம். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இரு மாவட்டங்களில் எம்முடன் இணைந்து போட்டியிடவுள்ளது. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மரம் சின்னத்திலும், திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளது.

அந்த மாவட்டத்தில் எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு வேட்பாளர்களில் ஒன்றை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட யுக மாற்றத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் நாங்கள் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய 7 மாவட்டங்களில் அவர்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம். கண்டி, திகாமடுல்ல, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை, குருநாகலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதுடன், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நாங்கள் மரம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளோம். கொழும்பு மாவட்டத்தில் மு.கா. போட்டியிடப்போவதில்லை என்பதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நாங்கள் அங்கு பாடுபடுவோம்” – என்றார்.

இதன்போது, பொதுத் தேர்தலில் மு.கா. சார்பில் பஷீர் சேகுதாவூத்துக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுமா? என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ரவூப் ஹக்கீம், “பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை பஷூர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்” – என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹமட் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE