நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!- வடமாகாண முதலமைச்சர்

338

 

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிற்கும், நோர்வே நாட்டில் தூதுவர் கிறீட்ட லோஷனுக்குமிடையில் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றிருக்கின்றது.

இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் சூழ்நிலை மாற்றம் எவ்வாறுள்ளது? என்பது தொடர்பாக அவர் எம்மிடம் வினவியிருந்தார். அதில் குறிப்பாக சில மாற்றங்கள் உருவாகியிருக்கின்றமையினை நாங்கள் ஒத்தக் கொண்டிருப்பதுடன், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் மற்றும் அவர்கள் எம்மோடு இணைந்து செயற்படும் தன்மை ஆகியவற்றை நாங்கள் வரவேற்றிருப்பதனை தெரிவித்திருக்கின்றோம்.

தொடர்ந்து ஜெனீவா தீர்மானம் பிற்போடப்பட்டமையினால் எவ்வகையான பாதிப்புக்கள் வரும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் எனவும், தமிழர்களுக்கு சாதகமான போக்கே தொடர்ந்தும் இருக்கும் நிலையில் பிற்போடப்பட்டதனை எதிர்ப்பதன் நோக்கம் என்ன? என அவர் எம்மிடம் வினவியிருந்தார்.

இதன்போது நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் சில இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் கைநழுவிப் போகும் என நாங்கள் நம்புவதால் அதனை உரியகாலத்தில் வெளியிடுங்கள் என கேட்டிருப்பதாக கூறினோம்.

அதற்குப் பதிலளித்த அவர் ஐ.நா ஆணையாளரின் கருத்தைச் சுட்டிக்காட்டி காலம் தாழ்த்தப்பட்டாலும் அது உரியவகையில் வரும் என்பதை எடுத்துக்காட்டியிருந்தார்.

தொடர்ந்து இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எதற்காக? என அவர் எம்மோடு வினவியிருந்தார். அதற்கு நாம் கூறியிருந்தோம். அந்த தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும். எனவே அதனை குறைத்துப் பார்க்கத் தேவையில்லை. மேலும் அதில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

அதற்கும் இடமில்லை. என்றே நாங்கள் நம்புகின்றோம். எதற்காகவெனில் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அவ்வப்போது வெளிப்படுத்திய அறிக்கைகளிலிருந்தே நாம் அந்த தீர்மானத்தை உருவாக்கினோம்.

மேலும் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஒத்துக்கொள்ளவேண்டும். அதனை கருத்தில் கொண்டுமே இதனை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என்றார்.

 

SHARE