கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்’. இதில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீதுஜோசப்பே தமிழிலும் டைரக்டு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக பகிர்வுகளை பெற்று வருகிறது. இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் கமல் பேசும்போது, ‘பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேன்’ என்றார். இதைக் கேட்ட கவுதமி சந்தோஷத்தில் ஆழ்ந்து போனார்.