நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ அர்த்தம் கொள்ள முடியாது-கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் ஜெனிவா பயணம்! இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும்!

397

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்வவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

 

ஜெனிவா செல்லும் இந்தக் குழு வரும் மார்ச் மாதம் அங்கு நடக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

நல்லூர் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் அவரிடம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போதே அவர் மேற்கண்டவாறு சொன்னார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. எமக்கு சரியான தீர்வு கிட்டும் வரை நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். எமது மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் – கொடூரங்களுக்கும் பதில் கிடைக்க வேண்டும்.

இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் எவையும் இல்லை. மார்ச் மாதம் ஜெனிவா செலலும் குழு சர்வதேசத்திடம் இதையே கோரும். என்றார்.

SHARE