நாதியற்ற தமிழன்..!

306

உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.

எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார்.

தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து தமிழினத்தின் வீரத்தினை உலகறியச்செய்த எம் புலவனின் பாடல்களில் நமக்கு மிகவும் பிடித்த வரி தான் இது

ஆசியாவின் கடல்களெல்லாம் ஆண்டவனும் தமிழன் – இன்று
அகதியாகி உலகமெங்கும் அலைபவனும் தமிழன்…

இந்தப்பாடல் வரிகளை எழுதும் போது என்றைக்கும் தமிழன் அகதியாகத் தான் அலைவான் என்று நினைத்து தான் எமது புதுவை இப்படி கவிவடித்தானா என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆம்…! இன்று உலகின் எல்லாப்பரப்பிலும் தமிழன் வாழ்கின்றான். வாழுகின்ற ஒவ்வொரு பரப்பிலும் அவனின் பெயருக்குப்பின்னால் அகதி என்கின்ற அடைமொழி உண்டு.

இது ஒரு புறமிருக்க…., வாழுகின்ற ஒவ்வொரு பகுதியிலும் அடிவாங்குவதும், கையேந்தி வாழ்க்கை நடத்துபவனாகவும் வாழுகின்றான் உலகின் மூத்த குடி என்று சொல்லப்படுகின்ற தமிழ்க்குடி..! எவ்வளவு வேதனை இது!

கடல் கடந்து ஆட்சிகளைக் கைப்பற்றி தன் இனத்தின் ஆட்சி எல்லைகளைப் பரப்பினான் தமிழனத்தின் பாட்டனும் முப்பாட்டனும், ஆனால் இன்று நிலைமை என்னவாயிற்று,

சொந்த நிலத்தில் குடியேற வந்த குடியேறிகளிடம் கையேந்த வேண்டிய நிலையும், சொந்தக் கடற்பரப்பில் மீன்பிடிக்க உரிமையில்லா திண்டாட்டங்களுமே மிச்சம்.

ஏன் இந்த நிலை, ஈழத்தில் தொடர்ந்தும் அடிமைமாடுகள் போல ஈழத்தின் பூர்வீகக்குடிகளான தமிழன் செத்துமடிந்து கொண்டிருக்கின்றான். இறுதியாக 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு மொத்தமாக கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டான்.

 

SHARE