நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது எதிரணி வேட்பாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என கேட்ட போது- ஒவ்வொருவரும் கருத்துக்களைக் கூறுவதற்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரினதும் கருத்துக்களும் கட்சிக் கூட்டங்களில் பெறப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படிதான் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை வாக்களிக்க செய்வதே னைவரதும் கடமை- என்றார். கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேட்ட போது – எமது கட்சியை சேர்ந்த ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று சிலரது அறிக்கைகளும் வெளி வந்துள்ளன. அவர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். தமிழரசுக் கட்சியின் தலைவர் நீங்கள் அவ்வாறு இருந்தும் தொலைபேசியில் அனந்தி சசிதரனுடன் ஏன் கதைத்தீர்கள்.
அதனால் பிரச்சனையாகிவிட்டதே? எனக் கேட்ட போது – அதில் எந்த உண்மையும் கிடையாது. அப்படி கதைத்தபோதுதான் மயக்கம் வந்தது என்று கூறுவது தவறானது. அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார். அவர் முற்பகல் 11 மணிவரை சாப்பிடவில்லை என்பதும், அதனால்தான் மயக்கமுற்றார் என்றும் தெரியவந்தது. எங்கள் வரலாற்றில், நாம் யாரையும் இதுவரை மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்தான் தவறானவை. – எனத் தெரிவித்தார்.