நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட்டில் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு

461
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்தியா 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது.

இதற்கிடையே நாளை 3-வது டெஸ்ட் சவுத்ஆம்ப்டனில் தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஸ்டூவர்ட் பின்னி இந்த டெஸ்ட் தொடரில்தான் அறிமுகமானார். முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் 78 ரன்கள் எடுத்து இந்தியா டிரா செய்ய முக்கிய பங்கு வகித்தார். ஆனால் லார்ட்ஸ் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் புற்கள் காய்ந்து காணப்பட்டன. இதனால் பந்துகள் பவுன்சர்கள் ஆகவில்லை. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் ஆடுகளம் பச்சை புற்களுடன் காணப்பட்டது. இதனால் பந்து வேகமாக பவுன்சர் ஆனது. இதனால் பின்னி திணறினார்.

ஆனால், இப்படி பவுன்சரை ரோகித் திறமையாக எதிர்கொள்வார். மேலும், வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி பெற்றார். இதற்கிடையே டோனி 6-வது வீரராக களம் இறங்கும்போது அவருடன் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட ஒரு வீரர் தேவைப்படுகிறார்.

அதனால் 6 பேட்ஸ்மேன், 4 பவுலர்களுடன் இந்தியா களம் இறங்க முடிவு செய்துள்ளது. இப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் இந்தியா ரோகித் சர்மாவை களம் இறக்கும். 6 போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் அடித்துள்ளார் ரோகித்.

SHARE