நிதிநெருக்கடி: ஐரோப்பாவில் உள்ள ராணுவத்தளங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முடிவு

473
உலகளாவிய பொருளாதாரப் பற்றாக்குறை வல்லரசு நாடான அமெரிக்காவையும் பாதித்து வருகின்றது. செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்ட காலமாகவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வரும் தங்கள் ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கென வைத்திருந்த பல ஆயுத சேமிப்புக் கிடங்குகள் உட்பட கோல்ப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை அந்த நாடுகளிடம் திருப்பித்தர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுபோன்று மொத்தம் 21 தளங்கள் அந்நாட்டு அரசால் திருப்பித் தரப்பட உள்ளன. ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், கிரீஸ், இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இந்த இடங்களை அமெரிக்க ராணுவத் துருப்புகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளன. இதன் மூலம் அமெரிக்க அரசின் வரவு செலவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 60 மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது. கிரிமியா நெருக்கடியினால் ரஷ்யாவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் தோன்றியுள்ள இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் இந்த முடிவு மேலும் நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடும் என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவு ஐரோப்பிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தங்கள் வீரர்களின் ராணுவத்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ரியர் அட்மிரல் ஜான் கிர்பி குறிப்பிடுகின்றார். தங்கள் ராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு பொறுப்புகள் செயல்படுத்தப்படுவதில் பின்னடைவுகள் இருக்காது என்றும் அவர் உறுதி கூறுகின்றார்.

அமெரிக்க அரசின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் கடந்த சில வருடங்களாகவே ஒரு ட்ரில்லியன் மதிப்பிலான செலவினங்களை கட்டுப்படுத்த முயன்று வருகின்றது. உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டு வெளிநாட்டு செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்கா நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலே இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE