நிபுணர் குழு அறிக்கை!
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக என்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது. இப்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீனமூன் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
அறிக்கை வெளியிட்ட பின்னர் பான் கீ ன மூனின் பேச்சாளர் மார்டின் கொஸ்க்கி நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு: இலங்கை அரசு இணங்கினால் அல்லது ஐ.நா அங்கத்துவ நாடுகள் அழைப்பு விடுத்தால் மாத்திரமே சுதந்திரமான சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும். ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளது.
இருப்பினும் தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைக்கும் அதிகாரம் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இல்லை. நிபுணர் குழு உடனடியாக நியாயபூர்வமான விசாரணைகளை நடத்த வேண்டும் என சிபாரிசு செய்துள்ளமையை பான் கீ ன மூன் வரவேற்றுள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பாகத் தமது கருத்துகளை வெளியிடுமாறு பல தடவைகள் கோரியபோதும் இலங்கை அரசிடம் இருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை. அறிக்கை தொடர்பாக ஆத்திரமுற்றத் தொனியில் இலங்கையிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகள்ன செயற்பாடுகள் தொடர்பாக செயலாளர் நாயகம் விசனமடைந்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு பக்க சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும். சர்வதேச மட்டத்திலான பல்வேறு மனித உரிமைப் பிரகடனங்களில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனவே, சர்வதேச சட்டங்களின்படி விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது கொள்கை ரீதியான விடயம் அல்ல எனவும் அது அரசின் முதன்மையான கடமைகளில் ஒன்றாகும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்றும் மார்டின் கொஸ்க்கி தெரிவித்தார்.
நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை வருமாறு:ன அரச படையினரும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டனர். 2008 செப்டெம்பர் முதல் 2009 மே மாதம் 19ஆம் திகதி வரையான சுமார் 9 மாத காலப் பகுதியில் அதிகமான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. அரச படையினர் வன்னி நோக்கி முன்னேறியபோது யஐல் மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டதால் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்.
யுத்த சூனியப் பிரதேசமாக அரசு அறிவித்த மூன்று பிரதேசங்களில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது அரச படையினர் யஐல் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும் சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக சிறுவர்களையும் வயோதிபர்களையும் ஆயுதப் போராட்டத்தில் சேர்த்துக்கொண்டனர். இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட, சரணடைந்தவர்கள் உரிய முறையில் நடத்தப்படவில்லை.
அவர்களது உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சில கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச படையினர் ஐந்து பிரதான யுத்தக் குற்றங்களை மேற்கொண்டனர் என்று நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
1. செல் தாக்குதலில் பொதுமக்களைப் படுகொலை செய்தமை. 2. வைத்தியசாலைகள், மனிதாபிமான உதவிகளை வழங்கும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியமை. 3. பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைத் தடைசெய்தமை. 4. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலி சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை. 5. யுத்தப் பிரதேசங்களுக்கு அப்பால் ஊடக அடக்குமுறை உட்பட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை. விடுதலைப் புலிகள் ஆறு யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1. பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தியமை. 2. புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொது மக்களைக் கொலை செய்தமை. 3. பொது மக்கள் செறிந்த இடங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை. 4. சிறுவர்கள், வயதானவர்களைப் பலவந்தமாக ஆயுதப் படையில் இணைத்துக் கொண்டமை. 5. ஊழியர்களைப் பலாத்காரமாக கடமையில் ஈடுபடுத்தியமை. 6. தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொது மக்களைக் கொன்றமை. மேற்கண்ட குற்றச் செயல்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
TPN NEWS