நிரந்தர நியமனம் வழங்குங்கள்: யாழ் சுகாதார தொண்டர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்

335

 

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழில் சில சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு சட்டத்தின் போது கடமையாற்றிய தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனமைக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனே காரணம் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

16 வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய தமக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், அண்மையில் வடமாகாண சபையினால் வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கும் ஒருநாள் கடமையாற்றாதவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் தமக்கு மாத்திரம் இன்னும் நிரந்தர நியமனம் வழங்காமல் யாழ் பிராந்திய சுகாதார பணிமனை அசமந்த போக்கில் செயற்படுகின்றது என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் 16 வருடங்கள் தம்மை ஏமாற்றியது போதும் என்றும், தாமும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டால் மாத்திரமா, நிரந்தர நியமனம் வழங்குவீர்கள் என பொறிக்கப்பட்ட வாசகங்களை கைகளில் ஏந்தியவாறு கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு, மற்றும் யுத்தத்தின் போது, டெங்கு, மலேரியா, கர்ப்பவதிகளுக்கான கடமைகளை செய்த தாம் இன்று அதிகாரிகளினால் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE