நிறைவேற்று ஜனாதிபதி முறை முடிவுக்கு வருகிறது-19ஆவது திருத்தசட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

373

 

19வது அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனையை திருத்தங்கள் இன்றி ஏற்றுக்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த யோசனையின்படி இலங்கையின் ஜனாதிபதியானவர், நாட்டின் தலைவராகவும் பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் இருப்பார்.

அரசாங்கத்தின் தலைவர் தொடர்பில் எவ்வித யோசனைகளும் கூறப்படவில்லை. எனினும் பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்ட 17வது திருத்தத்தையும் அமைச்சரவை நேற்று அங்கீகரித்தது.

இதன்படி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் அமைப்பு சபை என்பன அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை என்பனவற்றின்மீது உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன.

இதற்கிடையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் முதல் தவணையுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முடிவுக்கு வரும் என்றும் அதற்கு பின் வரும் ஜனாதிபதிகள் இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளைப் போன்ற ஜனாதிபதிகளாக இருப்பர் என்பதையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

19ஆவது திருத்தசட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

19ஆவது திருத்தசட்ட மூலம், விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது.

அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

19ஆம் திருத்தசட்ட மூலத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமயவும், மக்கள் விடுதலை முன்னணியும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

SHARE