தலைவர் அஷ்ரப்பின் தலைமைத்துவத்தின் கீழ் உருவானதே முஸ்லீம் காங்கிரஸ். அவர் இன்று இருப்பாராகவிருந்தால் நிச்சயம் இந்த அரசிற்கு தகுந்த பாடம் கற்பித்திருப்பார். நீதியமைச்சராகவிருந்தும் கூட நீதியினை நிலைநாட்ட முடியாத அளவில் பல்லுப்பிடிங்கிய பாம்பாகவே அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அரசுடன் இருந்துவருகின்றார். அது மட்டுமல்லாது முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் ஹக்கீம் அவர்கள் குரல் கொடுத்துவந்தபோதிலும் அவருடைய குரல்வளை நசுக்கப்பட்டது. அளுத்கம மற்றும் பேருவளை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லீம் மக்களுக்கெதிரான இறுதித் தாக்குதல் சம்பவத்தின்பொழுதும் ஹக்கீம் அவர்கள் பெரும்வேதனையோடு அம்மக்கள் முன்னிலையில் உரையாற்றியிருந்தார். சந்தர்ப்பம் பார்த்து தகுந்த தருணத்தில் அரசிற்கு பாடம் கற்பிப்போம் என்பதே ஹக்கீம் அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும்.
முஸ்லீம் அரசியல்வாதிகள் கட்சி மாறுவது வழமையானதொன்றே. இருந்தாலும் அவர்களுடைய மத வழிபாட்டிற்கும், அவர்களுடைய தொழுகை இடங்கள் இடிக்கப்படுகின்றபொழுதிலும் இதனை அரசே திட்டமிட்டுச் மேற்கொள்கின்றது என்று அறிந்திருந்தும், அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பது பயனற்றது என்பதை அமைச்சர் ஹக்கீம் மட்டுமல்ல, இன்னும் பல முஸ்லீம் அரசியல்வாதிகளும் இன்று உணர்ந்திருக்கின்றார்கள். நீதியமைச்சர் என்ற வகையில் அவருடைய செயற்பாடுகளும் நீதியாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அரசாங்கத்துடன் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்க இன்னமும் முனைவாராகவிருந்தால் முஸ்லீம் சமுதாயம் அவரை ஒரு தேசத்தின் துரோகியாகவே கணிப்பிடும்.