நேர காலத்தோடு வாக்களியுங்கள்! விதிமுறைகளை மீறினால் சிறை! குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிப் பிரயோகம்!

232

சுதந்திர இலங்கையின் 15வது பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும்.

வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் “அன்றைய உணவை சிறையிலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் வரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்பட்டால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பின் பெறுபேறுகளாக முதலில் தபால் மூல பெறுபேறுகளை இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்கிடையில் வெளியிட முடியுமென எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் வாக்குச் சாவடிகளுக்குள்ளோ அல்லது அண்மித்த பிரதேசங்களிலோ வன்முறைகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச்சாவடியின் வாக்கெடுப்பு முற்றாக ரத்துச் செய்யப்பட்டு இன்னொரு தினம் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை அந்த மாவட்டத்திற்கான பெறுபேறுகள் வெளியிடுவது தாமதப்படுத்தப்படும்.

வாக்காளர்கள் அலட்சியப்போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தங்களுக்குள்ள உரிமையை இன்று முழுமையாக பயன்படுத்தி நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய அவர், வாக்காளர்கள் அடையாளமிடும் கட்சி மற்றும் விருப்பு இலக்கங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தினை தேர்தல்கள் திணைக்களம் வழங்குவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

அத்துடன் வாக்கு எண்ணுதல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே முன்னெடுக்கப்படும் என்பதனால் குறித்த பிரதேசத்தின் வாக்காளர்கள் எந்த கட்சியினுடைய ஆதரவாளர்கள் என்ற தகவல்கள் வெளி வருவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அவர் நம்பிக்கையளித்தார்.

தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுகோளின் பேரில் பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்ககோனின் பணிப்புரையின், பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ணவின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டிருக்கும் நிலையில் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வன்முறைகள் இடம்பெறுமாயின் அவற்றை உடனுக்குடன் மூன்று மொழிகளிலும் தேர்தல் ஆணையாளருக்கு முறையிடும் வகையில் விசேட குறுந்தகவல்கள் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து நடத்தப்படும் 15ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும். பாராளுமன்றத்தின் 196 பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக இன்று நாடு முழுவதுமுள்ள ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கவுள்ளனர். 2014ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படியே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதேவேளை, பொது தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாகப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் ஆரம்பிக்கப்படுவது முதல் பெறுபேறுகள் வெளிவரும் வரை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள். ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சூழ்நிலைக்கேற்ப பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்படு மென்றும் அவர் எச்சரித்தார். இதற்கமைய, தேவையேற்படின் வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தவும் பின்வாங்க மாட்டோமென்று அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE