பணத்திற்கு ஆசைப்பட்டு திருடர்களிடம் தனது 7 பவுண் தாலியை பறிகொடுத்த பெண்! வவுனியாவில் சம்பவம்

142
வவுனியா நொச்சிக்குளத்தைச் சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை நேற்று முன்தினம் திருடர்களிடம் பறிகொடுத்த பரிதாப சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் தெரிவிக்கையில்,

நாகரீகமாக உடையணிந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியை அணுகி தாங்கள் இரத்தினபுரியிலிருந்து வந்திருப்பதாகவும் தங்களிடம் இரத்தினக்கல் ஒன்று இருப்பதாக சிங்களம் மற்றும் தமிழ் கலந்த கொச்சை தமிழில் பேசியதுடன் இரத்தினக்கல்லின் பெறுமதி 15 லட்சம் ரூபா என தெரிவித்ததுடன் தாங்கள் வெளியூர் என்பதால் தங்களை கடைக்காரர் நம்பவில்லை, அதனால் இந்த இரத்தினக்கல்லை விற்றுத்தந்தால் ஒரு லட்சம் ரூபா தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணிடம் துணியில் சுற்றி கட்டப்பட்ட கல் ஒன்றை கொடுத்துள்ளனர்.

இதன்போது அப்பெண்மணியிடம் திருடர்கள் 15 லட்சம் ரூபா இரத்தினக்கல்லை எடுத்துச் செல்லும் நீங்கள் நம்பிக்கைக்கு ஏதாவது கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறியதற்கு இணங்க அப்பெண்மணி தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

கடையில் சென்று பார்த்த போது துணியில் சுற்றப்பட்டிருந்தது ஒரு சிறிய கருங்கல் என தெரிய வந்திருந்தது.

ஏமாற்றப்பட்ட பெண்மணி தாலிக்கொடியை வாங்கியவர்களை தேடிய போது அவர்கள் மாயமாகியிருந்தனர்.

பறிகொடுத்த தாலியின் பெறுமதி சுமார் 3,50,000 என தெரிவிக்கப்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

– See more at: http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq1J.html#sthash.qYdht2r3.dpuf

SHARE