பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
இந்தநிகழ்வில் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க பங்கேற்காதது, அவர் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அண்மைய நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அவர் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல்விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி விக்கிரமநாயக்கவை அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், தேடிய போதும், அவர் எங்குமே தென்படவில்லை.
இதையடுத்து. அவர், எதிரணியின் பக்கம் சாயலாம் என்ற ஊகங்கள் மேலும் வலுத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர விசுவாசியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
“மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி”! வெளியிடப்பட்டது மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்
இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது.
இந்த விஞ்ஞாபனம் இன்று முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது.
“மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுமிருந்தது.
ஏற்கனவே இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ம் திகதியே வெளியிடப்படும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் கடந்த 19ம் திகதியன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.