
நடந்து முடிந்த ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில், வெற்றிபெற்ற மைதிரிபால ஶ்ரீசேன அவர்கள், 51.28% வீதம், (6217162, இலட்சம் வாக்குக்களையும்) தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 47.58% (5768090, இலட்சம் வாக்குக்களையும்) பெற்றிருக்கின்றனர்.
கிடைக்கப்பெற்ற வாக்குக்களில் நான்கு சதவிகித வாக்குக்கள் மைத்திரிபால ஶ்ரீசேன அதிகமாக பெற்றிருக்கிறார். ( மைத்திரிபால ஶ்ரீசேன 6217162 – மஹிந்த ராஜபக்ஷ 5768090 =449072 அதாவது நான்கு இலட்சத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எழுபத்தி இரண்டு வாக்குக்களை அதிகமாக பெற்று ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபால ஶ்ரீசேன தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மைத்திரிபால ஶ்ரீசேனவுக்கு 7,41867 வாக்குக்களும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2,00932 வாக்குக்களும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவை விட மைத்திரிபால ஶ்ரீசேனவுக்கு வடக்கு கிழக்கு தமிழர்களின் ஐந்து இலட்சத்து நாற்பதுனாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து ஐந்து வாக்குக்கள் அதிகப்படியான வாக்குக்களாக பதிவு செய்ய்யப்பட்டிருக்கின்றன. (540935) எனவே மைத்திரி பால ஶ்ரீசேனவை ஜனாதிபதியாக்கிய வாக்குக்கள் அனைத்தும் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குக்கள் என்பதை நாடும் மக்களும் அறிந்து கொள்ள முடியும்.
அதற்கு பாடுபட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியை சேர்ந்த இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன். ஆகியோர் ஆவர்.
தேர்தல் நடந்த 08, 01, 2015 அன்று ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் ஜனாதிபதி மாளிகையை விட்டு நள்ளிரவில் வெளியேறிவிட்டார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.
பத்து வருடங்களாக பதவியிலிருந்து அரசியற் சாசன சட்டங்களை தனக்கு சாதகமாக திருத்தி ஜனநாயகத்துக்கு முரணாக தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்ஷ தான் வெற்றி பெறுவேன் என்று 100% சதவிகிதம் ஒருபோதும் நம்பியிருந்திருக்க முடியாது. ஒருவேளை ராஜபக்ஷ தோற்றுப்போயிருந்தாலும் அவருக்கு உடனடியாக அரசியல்ரீதியாக எந்த சங்கடமும் வருவதற்கு சந்தற்பம் இல்லை, அடிப்படையில் தன்னை காத்துக்கொள்ளுவதற்கான காப்பரணான வலைப்பின்னல் பிடிமானம் உள்ளூர நிறையவே இருக்கிறது என்பதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார்.
புதிய ஜனாதிபதியான மைத்திரிபால ஶ்ரீசேன, முன்னைய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் நெருங்கிய சகாவாக முக்கிய ஆலோசகராக மந்திரியாக இரண்டு மாதங்கள் முன்புவரை ஒன்றாக இருந்தவர், இராணுவ நடவடிக்கை, இனப்படுகொலை ஆகிய அனைத்திலும் மைத்திரிபால ஶ்ரீசேனவுக்கு முக்கிய பங்கு உண்டு, ராஜபக்ஷவுக்கு சர்வதேச ரீதியில் ஒரு நெருக்கடி வருமாக இருந்தால் அந்த நெருக்கடி மைத்திரிபால ஶ்ரீசேனவையும் மிகவும் மோசமாக பாதிக்கும் என்பது இருவருக்கும் புரியாததல்ல.
மைத்திரிபால ஶ்ரீசேன நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்து பதவியை அனுபவிக்கலாமே தவிர ராஜபக்ஷவை குற்றவாளி என்று எந்த இடத்திலும் சொல்லி காட்டிக்கொடுத்துவிட முடியாது.
அடுத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக எதிரியாக இருந்தாலும் யுத்தம் பற்றிய சர்வதேச, அல்லது உள்ளூர் விசாரணை ஒன்று வரும்போது ராஜபக்ஷவை விடவும் முன்னணியில் குற்றவாளியாக விசாரணைக்குட்படவேண்டிய இடத்தில் இருப்பவர் சரத் பொன்சேகா.
சரத் பொன்சேகாவின் வன்னி முள்ளிவாய்க்கால் போர்க்களங்களின் மந்திராலோசனை கூட்டாளி கோத்தபாய ராஜபக்ஷ.
எனவே இன்று ஶ்ரீலங்காவை பொறுத்தவரையில் நிறைவேற்று ஜனாதிபதியின் இருக்கையில் உட்காருவதற்கான ஆள் ஒன்று மாற்றப்பட்டிருக்கிறது. அப்படியே திட்டமிட்டு சர்வதேச விசாரணை அல்லது அதுபற்றிய ஆராய்வுகள் நீண்ட தூரம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன என்பது ஆழமாக கூர்ந்து கவணித்தாலொளிய மேலோட்டமாக இப்போதைக்கு எவருக்கும் புரியப்போவதில்லை.
மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி புளகாங்கிதமடையும் தமிழர் தரப்பு குதூகலம் ஓரிரு வாரங்களில்/ மாதங்களில் மறைந்து நிலவரங்கள் எல்லாம் பழைய நிலைக்கு வரும்போது வெற்றி நிச்சியம் என்று மைத்திரிபால ஶ்ரீசேன கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய தமிழரசு கட்சியினர் அடுத்து என்ன செய்யப்போகின்றனர் என்பதை பொறுத்தே அரசியலின் அடுத்த கட்ட பரிமாணம் புரியப்படும்.
தவிர ராஜபக்ஷவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றலாம் தமிழர் வாழ்விடங்களில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்பதெல்லாம் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. அதுதான் அரசியல் அவதானிகளின் அனுமானமாக இருக்கிறது. ஏனெனில் மைத்திரி ரணில் சந்திரிகா கூட்டணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் அதைத்தான் ஒரு எழுத்து பிறழாமல் வரையறுத்து தெரிவிக்கிறது.
அப்படியானால் ஏன் ஜனாதிபதி மாற்றத்துக்கு தமிழர்களின் வாக்குக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான கேள்விக்கு சம்பந்தர், மாவை, சுமந்திரன் பதில் சொல்லியாகவேண்டும்.
நல்லது நடந்தால் வரலாற்று பெருமைக்குரிய இரட்டிப்பு மகிழச்சி தமிழினத்துக்கே ஏமாற்றப்பட்டால் அதற்கு எழுவாயாக இருந்து பிரச்சாரம் செய்த தமிழரசு கட்சி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வேறு வழியுமில்லை.
இது சம்பந்தமான நகர்வுகளை இன்னும் சில தினங்கள் அவதானித்து காரசாரமான விமர்சனத்துக்கு வரலாம் என்ற எண்ணத்துடன்.
ஈழதேசம் செய்திகளுக்காக,
ஊர்க்குருவி