பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வரவேற்பார்.

395

 

“பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வரவேற்பார். இது உறுதி.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டுவதற்கும் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் என நாட்டு மக்கள் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சுஜீவ சேனசிங்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசில் இருப்போர் தற்போது எதிர்க்கட்சியின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்போது எதிர்க்கட்சியின் பலம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நல்லதொரு தீர்மானத்திற்கு வருவார் என்று நாம் நம்புகின்றோம். ஏனெனில் அவர் நேர்மையானவரும் அதேநேரம் தமது கடமையைச் சரிவரச் செய்பவருமாக இருக்கிறார். அத்துடன் அவர் முதுகெலும்புள்ளவராக செயற்படவேண்டும் என்பதனையே விரும்புகின்றோம். ஜனவரி 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நாமே வெற்றி பெறுவோம். அதன் பின்னர் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகும். பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார்.

அவர் நிச்சயமாக இலங்கை வருகை தருவார் என்பதற்கும் காரணம் உள்ளது. அதாவது பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்தவிடம் இருக்கின்றது. ஆகையினால் அவர் நிச்சயம் வருவார். பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு வருகை தரும்போது ஜனவரி 9ஆம் திகதி வெற்றி வாகை சூடியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக்கொண்ட கூட்டணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அவரை வரவேற்கப்போகிறார்”

SHARE