பலரின் கனவு கலைந்து, தேர்தல் முறையில் மைத்திரி அதிரடி.

339
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த யோசனைக்கு 18 சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலும், இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

20வது திருத்தச் சட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மற்றொரு யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்க அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.maithripala

 

SHARE