நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய எதிர்நோக்கியுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக சட்டம் கையாளப்படும் விதத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் வெறுமனே உபுல் ஜயசூரியவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத முடியாது. நாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதர சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலாகும்.
பல பொது நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டதன் காரணமாவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், அது முழு சட்டத்தரணிகள் சமூகத்திற்கு ஏற்பட்ட தீங்காக கருதப்பட வேண்டும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரது தலையீடு இன்றி பொலிஸ் சட்டத்தின் 22 பிரிவின் படி பொலிஸார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் திலக் மாரப்பன சுட்டிக்காட்டியுள்ளார்.