பழந்தமிழ் நாகர்குல மன்னன் நாகராசனின் குருந்தூர்க்குளத்தை சீர்செய்து தாருங்கள். முல்லை.குமுளமுனை மக்கள் கோரிக்கை  

439

தொள்ளாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு பாசனவசதி பெறவல்ல பழந்தமிழர் நாகர்குல மன்னன் நாகராசன் நிர்மாணித்த குருந்தூர்க்குளத்தை சீர்செய்து தாருங்கள் என குமுளமுனை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த தமிழர் அடையாளமாக விளங்கிவரும் இக்குளத்தின் குளக்கட்டுப்பாதையும் பல வருடகாலமாக சீர்செய்யப்படாது உள்ளதோடு ஒடுகின்ற நீரை மறிக்கவல்ல குளக்கட்டும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் பாய்ந்துவரும் நீர் வீணாகிச்செல்கிறது என கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-01-01 அன்று குமுளமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவ்விடத்திற்கு சென்ற வடமாகாணசபைஉறுப்பினர் ரவிகரன் மக்களின் குள புனரமைப்பு தொடர்பான கோரிக்கையை கேட்டறிந்ததோடு மேற்படி குளத்தையும் பார்வையிட்டார்.
கைவிடப்பட்ட நிலையில் இருந்த குளக்கட்டுப்பாதை வழியே அரை மணித்திற்கும் மேலாக நடந்து சென்று புனரமைக்கப்படவேண்டிய இடங்களை பார்வையிட்டதோடு குறிப்பிட்ட இடங்களில் நின்று அக்குளம் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
குருந்தூர்குளத்தின் வரலாறு இயக்கர் நாகர் காலப்பகுதியையும் கொண்டிருப்பதாகவும் நாகர் குல மன்னன் நாகராசன் காலத்தே நிர்மாணிக்கப்பட்ட குளமாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் காலப்பகுதியில் சில சில புனருத்தாரண வேலைகள் அங்கு நடைபெற்றதாகவும் குமுளமுனை மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஏறத்தாழ தொள்ளாயிரத்து ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு விவசாயம் செய்யக்கூடிய அளவுக்குரிய இக்குளம் 1948 இன் பிற்பட்ட காலப்பகுதியில் எதுவித திருத்த புனருத்தாரண வேலைகளுக்கும் உட்படாது இன்றளவில் ஒரு ஏக்கர் நிலமும் பயன்படாதவகையில் வழிந்தோடுகின்ற நீரும் நாயாறு கடல் நீரேரியுடன் கலப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,
இப்பிரதேசம் நீண்டகாலமாக தமிழர் அடையாளங்களை பறைசாற்றும் பூமி. ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவு விளைச்சலை தந்து தாயகத்தின் பசியை போக்கும் அடையாளம். இக்குளம் புனரமைக்கப்பட்டு அதன் மூலம் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் மேலதிக விவசாயம் செய்யும் போது தாயகத்தின் தன்னிறைவான விளைச்சலை நோக்கிய எமது பயணமும் இன்னும் வலுப்பெறும்.
இக்குளத்தினை புனரமைப்பு செய்வது தொடர்பிலான கோரிக்கையை மாகாணவிவசாய அமைச்சரிடம் முன்வைக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
unnamed
SHARE