பஷீரிடம் மறைந்துள்ள ரகசியங்கள்…! அந்தரத்தில் “SLMC”

122

ரக­சி­யங்கள் பல­வி­த­மா­னவை. ஆழ்­கடல் தொடங்கி இம­ய­மலை வரை­யிலும் உலகின் ரக­சி­யங்கள் விரிந்து கிடக்­கின்­றன. அழகின் ரக­சியம், அன்பின் ரக­சியம், ஆன்மிகத்தின் ரக­சியம், மன்­மத ரக­சியம் என்று ரக­சி­யங்­களின் பட்­டியல் நீண்டு செல்­கின்­றது. காலப்­போக்கில் மற்­ற­வ­ருக்கு கூறக்­கூ­டிய ரக­சி­யங்கள், கடை­சி­மட்டும் சொல்­லவே கூடாத ரக­சி­யங்கள் என இரு­வ­கைகள் உள்­ளன.

ஊருக்­குத்­தெ­ரிந்த ரக­சி­யங்­களும் ரக­சியம் என நாம் மட்டும் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்ற விட­யங்­களும் இருக்­கின்­றன. கணவன் – மனை­வி­யி­டமும், பெற்றோர் – பிள்­ளை­க­ளி­டமும், குடும்பம் – உற­வு­க­ளுக்கு இடை­யிலும் முக்­கி­ய­மான ரக­சி­யங்கள் பல பொதிந்து கிடக்­கின்­றன.

அர­சி­யலைப் பொறுத்­த­மட்டில், மக்கள் பற்­றிய ரக­சி­யங்கள் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் அர­சி­யல்­வா­திகள் பற்­றிய ரக­சி­யங்கள் மக்­க­ளி­டமும் பத்­தி­ர­மாக இருக்­கின்­றன.

ஆனால் மக்கள் பற்­றிய ரக­சி­யங்­களை விடவும் அர­சி­யல்­வா­திகள் பற்றி மக்­க­ளிடம் இருக்கும் ரக­சி­யங்­களே அதி­க­மா­னவை எனக் கூறலாம். ஏனென்றால் மக்கள் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் எதையும் மறைப்­ப­தில்லை.

அர­சியல் செய்­வோரே தம்மை பரி­சுத்­த­மா­ன­வர்­க­ளாக காட்டிக் கொள்­வ­தற்­காக தமது குறை­களை ரக­சி­யங்­க­ளாக மறைத்து வைக்­கின்ற பழக்­கத்தை கொண்­டுள்­ளனர்.

தமக்கு மட்­டுமே தெரியும் என அர­சி­யல்­வா­திகள் நினைத்துக் கொண்­டி­ருக்கும் பல விட­யங்கள் ஊருக்குத் தெரிந்த ரக­சி­யங்­க­ளா­கவே இருப்­பது சுவா­ரஸ்­ய­மா­னது.

அச்­சு­றுத்தும் அறிக்கை

இன்னும் 20 நாட்­களில் நடை­பெறப் போகும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் இந்த நாட்டின் வர­லாற்றில் சில திட்­ட­வட்­ட­மான முடி­வு­க­ளுக்கு இட்டுச் செல்லப் போகின்­றது.

இத் தேர்தல் பற்றி பெரும்­பான்மை கட்­சிகள் மட்­டு­மின்றி தமிழ் கட்­சி­களும் அடிக்­கடி சந்­திப்­புக்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் முஸ்லிம் கட்­சி­களும் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யல்­வா­தி­களும் தமது வாக்கு வங்­கி­களில் மட்­டுமே குறியாய் இருக்­கின்­றனர்.

ஒரு சமூகம் என்ற அடிப்­ப­டையில் பரந்­து­பட்ட செய­லாற்­ற­லையும், ஒரு பொதுத் தளத்தில் வேலை செய்­வ­தையும் முஸ்லிம் அர­சி­யலில் தற்­ச­மயம் காணக் கிடைப்­ப­தில்லை.

இத் தேர்தலில் நல்­லாட்­சியின் பங்­கா­ளர்கள் ஒரு புறத்தில் போட்­டி­யி­டு­கின்­றனர். மறு­பு­றத்தில், முன்னாள் ஜனா­தி­ப­தியும் பொது பல­சே­னாவின் வேட்­பா­ளர்­களும் களத்தில் இருக்­கின்­றனர்.

அந்த வகையில் முஸ்லிம் கட்­சிகள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் யாவரும் ஒன்­றி­ணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வியூகத்தை வகுத்­தி­ருந்தால் அது மிகவும் புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. மக்­க­ளுக்கு இடையில் ஒற்­றுமை ஏற்­பட வேண்­டு­மென உரத்த தொனியில் பேசு­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமக்­கி­டையே ஒற்­று­மையை நிலை­நாட்டி ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், மக்கள் எல்லாம் ஒன்­று­தி­ரண்டு அவர்­க­ளுக்குப் பின்னால் நின்­றி­ருப்­பார்கள்.

ஆனால் அவர்கள் இன்­னு­மின்னும் தங்­க­ளு­டைய பதவி பட்­டங்­க­ளுக்­கா­கவும் கட்­சியை வளர்ப்­ப­தற்­கா­கவும் மக்­களை பிரித்­தாளும் அர­சியல் தந்­தி­ரத்­தையே மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இம்­முறை தேர்­தலில் முஸ்லிம் கட்­சிகள் ஏதோ ஒரு அடிப்­ப­டையில் ஒரு­மித்த முடிவை எடுத்­தி­ருக்க வேண்டும்.

ஒரே கூட்­ட­ணி­யாக எல்லா இடங்­க­ளிலும் இணைந்து போட்­டி­யிட்­டி­ருக்­கலாம்.

மாவட்­டங்­களை தங்­க­ளுக்கு இடையில் பகிர்ந்து கொண்­டி­ருக்­கலாம் அல்­லது வேட்­பா­ளர்­களை கலந்­து­பேசி நிய­மித்­தி­ருக்­கலாம்.

ஆனால் இவை எதையும் செய்ய தவ­றி­விட்­டன முஸ்லிம் கட்­சிகள். இவ்­வாறு, கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான இணக்­கப்­பாடு என்­பது இல்­லாமல் போன காலம் கடந்து, இப்­போது ஒரு தனிக் கட்­சிக்­குள்ளே ஏகப்­பட்ட முரண்­பா­டுகள் தோற்றம் பெற்­று­விட்­டன. பெரிய முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸே இந்த நோயினால் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒரு அறிக்­கையை விடுத்­துள்ளார்.

முஸ்லிம் காங்­கிரஸ் உடைந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக கட்­சியை கட்­டிக்­காத்த போரா­ளி­யான நான் இம்­முறை மட்­டக்­களப்பு வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்­வதில் இடம்­பெற்ற உள்­ள­ரங்­கங்­களை மேடை­போட்டு வெளிப்­ப­டுத்த வேண்­டிய காலம் வந்­துள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

உண்­மையில், மு.கா. தவி­சா­ளரின் பேச்சைக் கேட்டால் வேட்­பாளர் தெரிவு பற்றி மட்­டு­மின்றி, அவ­ரிடம் கட்சி பற்­றிய வேறு­பல ரக­சி­யங்­களும் இருப்­பது போல்தான் தெரி­கின்­றது. அவற்றை எல்லாம் தலை­மைக்கு ஞாப­கப்­ப­டுத்­துவதன் மூலம் எச்­ச­ரிக்கை விடு­வ­தற்கு பஷீர் முனை­வ­தா­கவும் கருத முடியும்.

பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்ற பேராசை கட்­சியின் முன்னாள் எம்.பி.க்கள் உள்­ளிட்ட அநேக முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு இருந்­தது.

ஆயினும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்­டுச்சேர்ந்து போட்­டி­யிடும் வியூ­கத்தை கட்சி வகுத்­ததால் சில­ருக்கு வாய்ப்பு கிடைக்­காமல் போயுள்­ளது.

கட்சி தனித்துப் போட்­டி­யிட்­டி­ருந்தால் ஊருக்­கொரு வேட்­பா­ளரை நிறுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் யானையில் வந்­ததால் குறிப்­பிட்ட சில ஆளு­மை­க­ளுக்கே வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் பழைய குதி­ரை­களில் முஸ்லிம் காங்­கிரஸ் பந்­தயம் கட்­டி­யி­ருக்­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பெரும்­பாலும் புதிய குதி­ரைகள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வி­ரண்டு தீர்­மா­னங்­க­ளுமே சம­கா­லத்தில் கட்சி உறுப்­பி­னர்­க­ளாலும் ஆத­ர­வா­ளர்­க­ளாலும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றன.

பழை­ய­வர்­க­ளையும் புதி­ய­வர்­க­ளையும் கலந்து மாவட்­டத்தில் எல்லா பகு­தி­க­ளையும் ஓர­ள­வுக்கு உள்­ள­டக்கும் விதத்தில் பர­வ­லாக கள­மி­றக்­கி­யி­ருந்தால் இவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­காது என்­பதைக் கூட உயர்­பீடம் முன்­னு­ணர்ந்து கொள்­ள­வில்­லையோ என்­பது வினோ­த­மாக இருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே மு.கா. தவி­சாளர் பசீர் சேகு­தா­வூத்தின் அறிக்கை வெளி­யாகி இருக்­கின்­றது.

மறு­பு­றத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளிற்கு ஆத­ர­வாக வாக்­குத்­தி­ரட்­டு­வதில் இருந்தும் பஷீர் விலகி இருப்­பது போலவும் தென்­ப­டு­கின்­றது. இதனை வைத்துப் பார்க்­கின்­ற­போது வேட்­பாளர் பட்­டி­ய­லிலும் தேசியப் பட்­டி­ய­லிலும் தனது பெயரைப் போடாமல் புற­மொ­துக்கி இருக்­கின்­றமை அவ­ருக்கு பெரி­ய­தொரு சிக்­கலை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது.

இதனால், இவ­ரிடம் ஏதா­வது ரக­சி­யங்கள், பிடிகள் இருந்தால் மறை­மு­க­மாக அதனை தலை­வ­ருக்கு ஞாப­கப்­ப­டுத்தி அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான அறிக்கை ஒன்றை சேகு­தாவுத் விட்­டி­ருக்­கின்றார் என்­பது பொது­மக்­களின் கணிப்பு.

மக்­க­ளி­ட­முள்ள பிடி வெளியில் தெரி­யாத விட­யங்கள் அல்­லது ரக­சி­யங்கள் என்று வரும்­போது, எல்­லோ­ரி­டமும் அவ்­வா­றான நூற்­றுக்­க­ணக்­கான ரக­சி­யங்கள் இருக்­கின்­றன.

கட்­சிக்குள் நடக்கும் விட­யங்கள் மற்றும் தலைவர் போன்றோர் தொடர்­பான ரக­சி­யங்கள் தவி­சா­ள­ரிடம் நிச்­ச­ய­மாக இருக்­கலாம். அதே­போன்று தவி­சா­ளரின் கடந்­த­காலம் பற்­றிய பதி­வு­களும் ர­க­சி­யங்­களும் கட்­சித்­த­லைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளி­டையே இருக்­கலாம் என்­ப­தையும் இங்கு மறந்து விடக்­கூ­டாது.

இவற்­றை­யெல்லாம் பொது­மக்­க­ளுக்கு சொல்லாம்ல் மறைப்­பதே பெருங்­குற்றம் என்ற நிலையில், காலம் கடந்து அதைச் சொல்­வதும் அதனால் குப்­பையை குழப்­பு­வதும் பார­தூ­ர­மா­ன­தா­கவே இருக்கும்.

காங்­கி­ரஸ்கள் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இடையில் நடக்­கின்ற திரை­ம­றைவு நட­வ­டிக்­கை­களை அறி­யாத அள­வுக்கு மக்கள் ஒன்றும் முட்­டாள்­க­ளல்ல.

மக்கள் தம்­மி­ட­முள்ள ரக­சி­யங்­களை வெளியில் சொல்­லப்­போனால் கிட்­டத்­தட்ட 85 வீத­மான முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வேறு தொழில் தேட வேண்­டி­யி­ருக்கும்.

இதற்கு முஸ்லிம் காங்­கி­ரஸூம் விதி­வி­லக்­கல்ல. அர­சியல் என்­பது மிகவும் சிர­ம­மான, அர்ப்­ப­ணிப்பை வேண்­டி­நிற்கும் தொழில்­வாண்மை என்­பது மக்­க­ளுக்கு தெரிந்­தி­ருப்­ப­தாலும் சில விட­யங்கள் அர­சி­யலில் தவிர்க்க முடி­யா­தவை என்­பதை அவர்கள் அறிந்­தி­ருப்­ப­தாலும் இன்னும் மக்கள் அவை பற்றி பேசாமல் இருக்­கின்­றனர் என்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மு.கா. தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் கட்­சியின் முக்­கிய போராளி என்­ப­திலும் கட்­சிக்­காக கடு­மை­யாக உழைத்­தவர் என்­ப­திலும் மறு­பேச்­சுக்கே இட­மில்லை.

கட்­சியின் கட்­டுக்­கோப்பு சிதைந்­து­விடக் கூடாது என கட்­டிக்­காத்­தவன் நான் என அவர் குறிப்­பிட்­டுள்­ளதும் உண்­மை­யா­கவே இருக்­கட்டும். ஆயினும் கடந்த சில வரு­டங்­க­ளாக அவர் கட்­சிக்குள் இருந்து கொண்டு திரைக்குப் பின்னால் செய்த வேலைகள் பர­வ­லாக விமர்­சிக்­கப்­பட்ட ரக­சி­யங்­களே.

குறிப்­பாக கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவுடன் கட்சி அதி­ருப்­தி­ய­டைந்து இருந்த வேளையில் கட்­சியின் கட்­டுக்­கோப்பை தவி­சாளர் எந்­த­ள­வுக்கு பாது­காத்தார் என்­பதை இங்கு சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு தேர்தல் காலத்தில் தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாக தவி­சாளர் அறி­வித்த போதும் அத்­தேர்தல் முடியும் வரைக்கும் ஒரு நிழல் அமைச்­ச­ரா­கவே செய­லாற்­றி­ய­தாக தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.

அதேபோல் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தாக அறி­விக்­கப்­பட்ட பிற்­பாடு ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு அனுப்­பப்­பட்ட தவி­சா­ளரின் வாக­னங்கள் தொடர்ந்தும் அவ­ரது பாவ­னைக்­காக திருப்பி அனுப்­பப்­பட்­ட­மையும் கடை­சி­மட்டும் பல வரப்­பி­ர­சா­தங்கள் வழங்­கப்­பட்­ட­மையும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­யாத ரக­சி­ய­மல்ல.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக, இந்த நாட்டில் உள்ள சிறு­பான்மை முஸ்­லிம்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை கடந்த ஜனா­தி­பதித் தேர்தலில் எடுத்­தி­ருந்த வேளையில் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் அப்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு எழு­திய அன்­பு­மடல் பற்­றியும் அதன் இறு­தி­வ­ரி­களில் ஒளிந்­தி­ருந்த ரக­சியம் பற்­றியும் கட்­சியின் தலைவர், செய­லா­ள­ருக்கு மட்­டு­மல்ல மகா ஜனங்­க­ளுக்கும் நன்­றாக தெரியும்.

ஆனால் இவற்றை எல்லாம் கட்சித் தலைமை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தவும் இல்லை, செய­லாளர் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கவும் இல்லை என்­பதை இங்கு கவ­னத்திற் கொள்­ளவும்.

இது­போல இன்னும் நிறைய ரக­சி­யங்கள் கட்­சிக்­குள்ளே இருக்­கின்­றன. கட்­சியை முன்­னொரு காலத்தில் வழக்குப் போட்­ட­வ­ருக்கு பிற்­கா­லத்தில் முத­ல­மைச்சுப் பதவி கொடுக்­கப்­பட்­டதும், கட்சித் தலை­வரை நோன்பு திறக்க விடாமல் தடுத்­தவர் பின்னர் கட்­சிக்குள் உள்­வாங்­கப்­பட்­டதும், இம்­முறை தேர்தலில் அவர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டா­மையும், முஸ்லிம் காங்­கிரஸ் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் உறவை முறித்துக் கொண்ட பின்­னரும் ஓரி­ருவர் இர­க­சிய சந்­திப்­பு­களை மேற்­கொண்­டதும், மாகாண அமைச்சர் ஒருவர் கடந்த தேர்தலுக்கு முன் தனது பத­வியை ராஜி­னாமா செய்­வ­தாக அறி­வித்த பிற்­பாடும் அதனை பல நாட்கள் வரை சுகித்­ததும், ஒரு சில­ருக்கே தொடர்ச்­சி­யாக பத­வி­களும் பொறுப்­புக்­களும் வழங்­கப்­ப­டு­வதும், ஏன் குமாரி குரே விவ­கா­ரத்தில் மறைந்­தி­ருந்த சூட்­சு­மங்கள்.

என்று எத்­த­னையோ விட­யங்­களில் ரக­சி­யங்கள் மறைந்­தி­ருக்­கின்­றன. நெடுங்­கால வர­லாற்றைக் கொண்ட முஸ்லிம் கட்சி என்ற அடிப்­ப­டையில் மு.கா. கட்சி மற்றும் உறுப்­பி­னர்கள் பற்றி மறைக்­கப்­பட்ட விட­யங்கள் ஏரா­ள­மி­ருக்­கலாம்.

செய்ய வேண்­டி­யது

உண்­மை­யாகச் சொல்லப் போனால், கட்­சி­யுடன் போரா­ளி­களும் ஆத­ர­வா­ளர்­களும் உண்­மைக்­குண்­மை­யாக இருக்­கின்­றனர். கட்­சிக்கு மறைக்க வேண்­டிய விஷ­யங்­களும் அவர்­க­ளிடம் இல்­லை­யென்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் மக்­களால் வளர்க்­கப்­பட்ட ஒரு கட்­சிக்குள் ரக­சி­ய­மான முறையில் எந்த நட­வ­டிக்­கை­களும் இடம்­பெறக் கூடாது என்­பதே மக்­களின் எண்ணம்.

எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் கட்­சி­யா­னது தமது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்­ப­டையில், இவ்­வ­ளவு காலமும் திட்­ட­மிட்டு ஏதா­வது விடயம் மறைக்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்டு, அதனை நீண்ட நாட்­க­ளுக்குப் பின்னர் சந்­தர்ப்பம் பார்த்து வெளி­யிட நினைப்­பது சுய­ந­லத்தை சார்ந்­த­தாக வகைப்­ப­டுத்­தப்­படும்.

உள்­வீட்டு சம்­ப­வங்­களை கட்­சியின் கட்­டுக்­கோப்பு என்ற பெய­ரிலும், பிழை­யான தீர்­மா­னங்­களை மஷூரா என்ற தோர­ணை­யிலும் மறைத்து வைத்துக் கொண்டு, பின்­னொரு நாளில் கட்சி தாவு­கின்­ற­போது அல்­லது கட்­சியின் நட­வ­டிக்­கையில் அதி­ருப்தி அடையும் போது அதனை வெ ளியி­டு­வது அபத்­த­மா­னது.

அதுவும் அதனை வெளி­யி­டு­வ­தற்கு முன்­ன­தாக வெளி­யிடப் போவ­தாக அறி­விப்­பது எதையோ சாதித்துக் கொள்­வ­தற்­கான உத்தி என்ற அவ­தா­னிப்பும் இதி­லுள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரோ அல்­லது வேறு எந்த உறுப்­பி­னரோ, அவ்­வா­றில்­லா­விடின் வேறு சிறு­பான்மை கட்­சி­களின் அங்­கத்­த­வர்­களோ எந்­த­வொரு விட­யத்­தையும் உள்­நோக்­கத்­தோடு மக்­க­ளி­ட­மி­ருந்து மறைக்கக் கூடாது.

ஒரு கட்­சியின் ஒரு முக்­கி­ய­மான தீர்­மானம் ஏதோ­வொரு கார­ணத்­திற்­காக பிழை­யாக எடுக்­கப்­பட்ட போது அதனை மறைத்­து­விட்டு காலம் தாழ்த்தி அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றார்கள் என்றால், இவ்­வ­ளவு காலமும் அதனை மறைத்து வைத்­ததன் மூலம் அவ்­வி­ட­யத்தில் அவர்­க­ளுக்கும் பங்­கி­ருக்­கின்­றது என்­று­தானே அர்த்தம்?

அது ஒரு பிழை­யான தீர்­மா­ன­மாக இருந்து, அதனால் பின்னர் சமூகம் இழப்­புக்­களை சந்­தித்­தி­ருந்தால் அதற்கு வெளிப்­ப­டுத்து­னர்கள் அல்­லது பகி­ரங்­க­மாக்­கு­வோரும் பங்­கா­ளி­களே என்­பதை அடிக்­கோ­டிட்ட எழுத்­துக்­களால் குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளிடம் பஷீர் சேகு­தா­வூத்தின் மேற்­படி கருத்து பற்றி கேட்டால், முதலில் ஒரு சிரிப்பு சிரிக்­கின்­றார்கள்.

பின்னர், அப்­ப­டி­யான மறைக்­கப்­பட்ட விட­யங்கள் ஏது­மி­ருப்­ப­தாக தெரிய­வில்லை. ஒரு­வேளை தலை­வ­ருக்கும் அவ­ருக்கும் இடையில் ஏதா­வது இருக்­கலாம்.

இருந்தால் வெளிப்­ப­டுத்தச் சொல்­லுங்கள் நாமும் அறி­வ­தற்கு ஆவ­லாக இருக்­கின்றோம் என்­கின்­றனர் ஹாஸ்­ய­மாக. ஆனால் இவ்­வாறு செய்­வதால் என்ன பயன்? தவி­சாளர் ஒன்றைச் சொல்ல, தவி­சாளர் பற்றி தலைவர் வேறொன்றை சொல்லத் தலைப்­ப­டுவார்.

தலை­வரும் தவி­சா­ளரும் முரண்­பட்டால், கட்­சிக்கு வெளியி­லி­ருப்போர் மேலும் பல ரக­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டி­யேற்­படும்.

எந்தக் கட்சிக் கார­ராக இருந்­தாலும் அவர் யாரா­கினும்.. மக்­க­ளுக்கு நல்­லது நடக்க வேண்டும் என்று நினைப்­ப­வ­ராக அவர் இருப்­பா­ராயின், கட்­சிக்குள் பிழை­யான தீர்­மானம் எடுக்­கின்­ற­போது உட­ன­டி­யாக அது குறித்து மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.

தேவை­யேற்­பட்டால் கட்­சி­யி­லி­ருந்து விலகி வெளியில் வந்து மக்­க­ளி­டையே நடந்­ததை கூறக் கூடிய தைரியம் இருக்க வேண்டும். ஒரு குறித்த நபர் கட்­சியை விட்டு வெளியேறு­வதால் ஒட்­டு­மொத்­த­மாக அக்­கட்­சியே வீழ்ச்­சி­ய­டைந்து விடும் என்று கணக்குப் போடு­வது அர­சியல் அறி­யா­மையே அன்றி வேறொன்­று­மில்லை.

பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இந்த நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியும், தெளிவுபடுத்த வேண்டிய ரகசியங்களும் வேறுபட்டவை.

குறிப்பாக இந்த மாபெரும் அரசியல் இயக்கத்தின் காரணகர்த்தாவான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணத்தை பற்றிய மர்மத்தையும் அதிலிருக்கும் ரகசியங்களையும் கூட இன்னும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கப்பால் இன்றைய அரசியல் சூழலில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே கிடப்பில் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் செய்யாமல் வெறுமனே அறிக்கை அரசியல் நடத்துவது உசிதமானதல்ல என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

(ஏ.எல்.நிப்றாஸ்)

SHARE