பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி: ராணுவ தளபதியுடன் நவாஸ் ஷெரீப் ஆலோசனை

339
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கான் மற்றும் காத்ரியின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம் அருகில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பதவி விலகும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு ஒருபுறமிருக்க, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையும் பிரதமர் நவாசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ராணுவ தளபதி ரகீல் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் எல்லை நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பின்போது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தேசிய நலன் கருதி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருமித்த உணர்வு தேவை என்றும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ராணுவம் ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE