பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி – பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து

303
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இருநாட்டு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

போதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் இலங்கையின் சார்பிலும் பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் சர்தாஜ் அம்ஸ், பாதுகாப்பு அமைச்சர் கச்சா மொகமட் மற்றும் அமைச்சர்கள் ரியாஸ் ஹுசேன் பீர்ஸ்டா, கம்ரான் மிச்சேல் முஸாதிதுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்.

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாகிஸ்தான் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் அணுசக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழுவுக்குமிடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களே நேற்று கைச்சாத்திடப்பட்டன.

நேற்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையையடுத்தே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

1

1

1

1

1

1

SHARE