பாகிஸ்தானுக்கு 2வது வெற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படுதோல்வி…

361
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்தில் உள்ள நேப்பியரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதும் உலகக்கிண்ண ‘பி’ பிரிவு லீக் போட்டி இன்று நடக்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணித்தலைவர் முகமது தாகிர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் நசிர் ஜாம்ஷெத் (4) ஏமாற்றம் அளித்தார்.

பின் இணைந்த அகமது ஷேசாத் (93), ஹாரிஸ் சோகைல் (70) ஜோடி கைகொடுத்தது. அடுத்து வந்த மக்சூட் (45) அரைசத வாய்ப்பை இழந்தார்.

பொறுப்பாக ஆடிய அணித்தலைவர் மிஸ்பா (65) நம்பிக்கை தந்தார். உமர் அக்மல் (19) நிலைக்கவில்லை. அப்ரிதி (21), வாகாப் ரியாஸ் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இலக்கை கடினப்படுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் குருகே 4 விக்கெட்டுகளையும், முகமது நீவீது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கடின இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தான் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்ஜத் அலி (14), ஆண்ட்ரி பெரெங்கர் (2) நிலைக்கவில்லை.

அடுத்து வந்த கிருஷ்ண சந்திரன் (0) டக்-அவுட் ஆக வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த குராம்கான் (43), ஷைமன் அன்வர் (62) சிறப்பாக விளையாடி ஆட்டமிழந்தனர்.

ரொகன் முஸ்தபா (0) ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அம்ஜத் ஜாவட் (40) அதிரடியாக விளையாட ஓட்டங்கள் சேர்த்தார். மொகமட் நவிட் (0), மொகமட் தக்வீர் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில், சோகைல் கான், வஹாப் ரியாஸ், அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும், ராஹட் அலி, சொகிப் மக்சூட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சதத்தை தவறவிட்ட பாகிஸ்தானின் அகமது ஷேசாத் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

SHARE