பாகிஸ்தானை போட்டுத்தாக்கி அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா! காமன்வெல்த்தில் அதகளம்

16

 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

காமன்வெல்த் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஹீலி 4 ஓட்டங்களில் சனா பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மெக் லன்னிங்கும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மூனே, தஹலியா மெக்ராத் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

அரைசதம் கடந்த இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. மூனே 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார். தஹலியா மெக்ராத் 51 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்தார்.

இருவரும் 88 பந்துகளில் 141 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியை தஹலியா மெக்ராத் தனது பந்துவீச்சில் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா 23 ஓட்டங்களும், ஒமைமா சொஹைல் 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஆனால் ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை களத்தில் நின்ற ஃபாத்திமா சனா 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் தஹலியா மெக்ராத் 3 விக்கெட்டுகளையும் மேகன், டர்சி, ஜெஸ் ஜோன்சென், அலனா கிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

SHARE