பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: மந்திரி உட்பட 8 பேர் துடிதுடித்து பலி

165
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி அலுவலகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உள்துறை மந்திரி உட்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் சுஜா கான்ஜாதா. இவரது அரசியல் அலுவலகம், அட்டோக் அருகில் உள்ள ஷாதிகான் என்ற இடத்தில் உள்ளது. இன்று மதியம் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர், ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அலறினர்.

யாராலும், எங்கும் ஓட முடியாத படிக்கு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் மந்திரி சுஜாகான் ஜாதா உட்பட 8 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். போலீஸ் படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கிடைத்துள்ள ஆதாரங்களில் இருந்து இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் உத்தரவிட்டுள்ளார். கான்ஜாதா, பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு பக்கபலமாக நின்றவர் என்றும், உதவிகளையும், உத்தரவுகளையும் வழங்கியவர் என்றும் கூறப்படுகிறது

SHARE