பாகிஸ்தான் பஸ் விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

507
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள கலம் மலைவாசஸ்தலத்திற்கு இந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அருகிலிருந்த நதியை ஒட்டிய சாலையோரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இறந்தவர்களில் ஐந்து பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவர் என்று ஸ்வாட் அரசாங்க அலுவலகத்தின் மூத்த அதிகாரியான மெஹ்மூத் அசலம் தெரிவித்தார். இதில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று கூறிய அசலம் ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச்செல்லும்போது தூங்கியிருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். விபத்து நடந்த செய்தியை உறுதி செய்த உள்ளூர் காவல்துறை தலைமையான ஷகீல்கான் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இவர்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் உள்ளதாக அவர் கூறினார்.

உலகளவில் மிக மோசமான சாலைவிபத்துகளில் பாகிஸ்தானே முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்குக் காரணம் தரமற்ற சாலைகள், மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் டிரைவர்களின் பொறுப்பற்றதன்மை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE