ஈராக்கில் உள்ள போராளிகள் உணவகங்கள், சந்தைகள், மசூதிகள் போன்ற ஜனநெருக்கடி மிகுந்த இடங்களில் தாக்குதல்களை நடத்தி அதிகபட்ச சேதாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று பாக்தாதின் ஜடிடா என்ற இடத்தில் உள்ள ஷியா பிரிவு வழிபாட்டு பகுதியில் தற்கொலைத் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 11 பேர் பலியாகினர். இன்று மீண்டும் அதே பகுதியின் நெருக்கடி மிகுந்த சந்திப்பு ஒன்றில் கார்குண்டு வெடித்ததில் 15 பேர் பலியானதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்ததுடன் குண்டுவெடித்த இடத்தில் ஒரு பள்ளமே ஏற்பட்டிருந்தது. அருகிலிருந்த நடைபாதை முழுவதும் ரத்தக்கறைகள் காணப்பட்டது. கடைகளுக்கு முன்னால் கிடந்த சிதறல்களை எல்லாம் அந்தக் கடை ஊழியர்கள் பின்னர் சுத்தப்படுத்தினர் என்று தகவல்கள் தெரிவித்தன.